தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் முக்கியக் கூட்டாளியான காங்கிரஸ் இடையிலான உறவில் கடந்த ஒரு மாத காலமாகப் பெரும் விரிசல் நிலவி வந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி, கூட்டணியே முறிந்துவிடுமோ என்ற அச்சத்தை உடன்பிறப்புகள் மற்றும் கதர்ச் சட்டைத் தொண்டர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, காங்கிரஸ் கேட்ட தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வராததும், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் புதியதாகத் தொடங்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டியதும் இந்த விரிசலை அதிகப்படுத்தியது.
இந்த இக்கட்டான சூழலில், டெல்லியில் இருந்து அதிரடியான சில நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அன்னை சோனியா காந்தி ஆகியோர் ராகுல் காந்தியுடன் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில், தமிழகத்தில் மதச்சார்பற்ற சக்திகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக திமுகவுடனான கூட்டணியைத் தொடர வேண்டும் என்று மேலிடம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மூத்த தலைவர் ப. சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினர்.
டெல்லியில் இருந்து இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா, கடந்த ஒரு மாத காலமாக நிலவி வந்த பின்னடைவுகள் தற்போது சரி செய்யப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் திமுகவுடன் இணைந்திருப்பதே காங்கிரஸின் லட்சியம் என்றும், பாஜகவை எதிர்க்கத் துணிவற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியாது என்றும் அவர் கூறினார். ராகுல் காந்திக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருக்கும் புரிதல், 2019 மற்றும் 2021 தேர்தல்களைப் போலவே இந்த முறையும் மாபெரும் வெற்றியைத் தேடித்தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.