தமிழ்நாடு

"தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு ஆளுநர்தான் காரணமா?" முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி!

Malaimurasu Seithigal TV

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் இருப்பதற்கு ஆளுநர்தான் காரணமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, அப்பதவியை வகிக்க தகுதியற்றவர் என்றும், தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் அவரை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு, முதலமைச்சா் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

இந்த நிலையில், முதலமைச்சரின் கடிதத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் அவரது கோரிக்கைகளை ஆளுநர் நிறைவேற்றியவர் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும், வேங்கைவயல் விவகாரத்தில் முறையான நீதி கிடைக்க தாமதம் செய்யப்பட்டு வருவதற்கு ஆளுநர்தான் காரணமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சரின் மகனும், மருமகனும் ஊழல் செய்து 30 ஆயிரம் கோடி ரூபாயை ஒரே ஆண்டில் சம்பாதித்ததற்கு ஆளுநர் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் இருப்பதற்கு ஆளுநர்தான் காரணமா? என்று கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததற்கும், கல்வித் தரம் குறைந்து வருவதற்கும் ஆளுநர்தான் காரணமா? என்றும் கேட்டுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கும், அனைத்துத் துறைகளிலும் தலை விரித்தாடும் ஊழலுக்கும், அடிக்கடி நிகழ்ந்துவரும் சிறை மரணங்களுக்கும் ஆளுநர் எந்த வகையில் காரணம்? ஆவார் என்றும் பாஜக மாநில தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

கனிம வளங்களைக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்குக் கைப்பாவையாக இருக்கும் திமுக அரசு தமிழ்நாட்டை மேற்கு வங்காளம் போல சட்டம் ஒழுங்கற்ற காட்டைப் போல மாற்றப் போகிறது என்றும் விமர்சித்துள்ள அண்ணாமலை, குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.