தமிழ்நாடு

“பள்ளி மாணவர்கள் செய்யும் செயலா இது!” - போதை கலாச்சாரத்தை ஊக்குவித்த டீக்கடை உரிமையாளர்.. மறைமுக இடத்தை வைத்து வியாபாரமா?

டீக்கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mahalakshmi Somasundaram

இன்றைய சூழலில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அதனை தங்களின் சொந்த இலாபத்திற்க்காகவும், பணம் சம்பாதிக்கும் பேராசையிலும் சிலர் ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களை போதைப்பொருள் பயன்படுத்த மறைமுக இடங்களில் அனுமதிப்பதை வியாபாரமாக செய்து வருகின்றனர். அது போல திருப்பத்தூர் நகர பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு டீக்கடையின் பின்புறத்தில் உள்ள ஷட்டர் வழியாக பள்ளி மாணவர்கள் அடிக்கடி வெளியே சென்று, நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் அமர்ந்து கஞ்சா மற்றும் சிகரெட் போன்ற தவறான பழக்கங்களில் ஈடுபட்ட வந்திருக்கின்றனர்.

இந்தச் செயலால் மாணவர்கள் மறைமுக இடத்தில் அமர்ந்து போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருவது வழக்கமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அந்த பகுதியில் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி வந்திருக்கிறது. எனவே அனைவரும் பலமுறை டீக்கடை உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தும், பின்புற ஷட்டர் மூடப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் எளிதாக அந்த இடத்துக்குச் சென்று தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அச்சுதன் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த பள்ளி மாணவர்களை சந்தித்த அவர், அவர்களுடன் பேசி தவறான பழக்கவழக்கங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் மாணவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து டீக்கடை உரிமையாளரிடமும் நேரில் பேசிய சமூக ஆர்வலர், இனிமேல் பின்புற ஷட்டரை திறந்து வைத்து மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் சூழலை உருவாக்கக்கூடாது என்றும், உடனடியாக அதை மூடி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதையடுத்து, தற்போது சம்பந்தப்பட்ட டீக்கடையின் பின்புற ஷட்டர் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட கல்வி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், டீக்கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.