தமிழ்நாடு

“உதயநிதி சுதந்திரப் போராட்ட தியாகியா?. அவரும் கூத்தாடிதான்”- எதிர்க்கட்சி தலைவரை சரமாரியாக சாடிய லயோலா மணி!

"இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் அண்ணன் விஜய் மட்டும்தான்.."

Muthu Lakshmi

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சோழிங்கநல்லூர் மத்திய பகுதி இணை செயலாளர் ஏ.ஜாபர் ஏற்பட்டில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, முன்னாள் பாஜக MLA விஜயதாரணி, சோழிங்கநல்லூர் தவெக MLA ஈசிஆர் பி.சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி எதிர்க்கட்சி குறித்து NDA கூட்டணி குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேடையில் லயோலா மணி பேசியதாவது, “மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, அண்ணன் ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்த பெருமை உங்களை போன்ற தாய்க்குலங்களையே சாரும்” என்றும் “நீங்கள் செய்த புரட்சியால் தான் இன்று தமிழக வெற்றிக் கழகம் ஆளுங்கட்சியாக உருவெடுத்துள்ளது. வீட்டுக்கு வீடு விஜய், தமிழ்நாட்டுக்காக விஜய் என மக்கள் தங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து வாக்களித்துள்ளனர்” என்று வெற்றி பெற வாய்த்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய  அவர், ஒரு பக்கம் 25 கட்சிகளின் கூட்டணி, மறுபக்கம் 15 கட்சிகளின் கூட்டணி என நாற்பது தலைவர்கள் எதிர்த்து வந்தபோதும், ஒற்றைத் தலைவனாக, எட்டு கோடி மக்களின் காவலனாக நின்று அண்ணன் விஜய் வென்று காட்டியுள்ளார். ஆரம்பத்தில் நம்மைப் பார்த்து ஏளனம் செய்தவர்கள், இன்று பொதுவெளியில் ஒப்பாரி வைக்க தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சியை விமர்ச்சித்தார். தொடர்ந்து திமுக மற்றும் அதன் தலைவர்களை கடுமையாக விமர்சித்து லயோலா மணி “சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினைப் பார்த்து தலைவர் 'பார்ட்டி ஃபண்ட்' குறித்து ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார். அதற்கு பதிலளிக்க முடியாமல் அவர் சட்ட சபையை விட்டு ஓடிவிட்டார். சட்டமன்றத்தை ஒரு சினிமா தளம் போல மாறி உள்ளது என திமுகவினர் கருத்து தெரிவிக்கின்றனர். ‘சினிமாக்காரர்’ என்று நம்மை விமர்சிக்கும் உதயநிதி ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட தியாகியா அல்லது இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி குண்டு மார்பில் தாங்கியவரா? அவர் ஒரு பாடலுக்கு நடனமாடிய சினிமாக்காரர் தான். இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் அண்ணன் விஜய் மட்டும்தான்” என்று கடுமையாக விமர்ச்சித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக கூட்டணியை குறித்து பேசிய லயோலா மணி, “மதவாதமும் பாசிசமும் எந்த வடிவத்தில் வந்தாலும், அதிமுக மீது சவாரி செய்து கொண்டு பாஜக தமிழக மக்களைப் பிரிக்க நினைத்தாலும், அதைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே முன்கல பணியாளர் நமது தவெக தலைவர் விஜய் மட்டும்தான்” என்று தேர்தலுக்கு பின் முதல் முறையாக ஒன்றிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதியின் சவாலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “தவெக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மேயரை வெற்றி பெற்றால் மீசையை எடுத்துக் கொள்வதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விட்டுள்ளார். சென்னை மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் தவெக கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்கும். அவர் மீசையோடு இருக்க வேண்டுமா இல்லையா என்பதை அவரே கண்ணாடி முன்னாடி நின்று முடிவு செய்து கொள்ளட்டும்” என்றும் திமுக நிர்வாகி  ஆர்.எஸ்.பாரதிக்கு சவால் விடும் விதமாக பேசியுள்ளார்.

மக்கள் அண்ணன் விஜய்யின் அழகைப் பார்க்க கூடுகிறார்கள் என விமர்சித்த திமுகவிற்கு, மக்கள் தேர்தல் மூலம் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளதாகவும், இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரே மகத்தான முதலமைச்சராக நீடிப்பார். அதற்குப் பிறகு இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய பாரத பிரதமராக அண்ணன் ஜோசப் விஜய் உயர்வார் என லயோலா மணி தனது உரையில் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.