

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் கலைஞரின் 103 வது பிறந்தநாள் விழா மற்றும் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் ஆளுமை அரசு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளார்.
ஓராண்டு, இரு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பதற்காக இயக்கங்கள் தொடங்குவதை போல் அல்லாமல், சமுதாய சீர்திருத்த இயக்கமாக திமுகவை அண்ணா தொடங்கினார். மற்ற இயக்கங்களைப் போல ஆட்சிக்கு வரவேண்டும் என்று தொடங்கப்பட்ட இயக்கம் திமுக அல்ல. ஆனாலும் ஆட்சிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்ட பொழுது தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்களை தொடக்க காலத்தில் அண்ணா பின்பற்றியது போல கலைஞரும் பின்பற்றினர். வயலில் உள்ள நாற்றங்கால் போல, திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து, பிறகு பிற மாநிலங்களுக்கும் தேசிய அளவில் திட்டங்களை தருகின்ற மாநிலங்களாக உருவாக்கிய பெருமை முன்னாள் முதல்வர் ஸ்டாலினையே சாரும்.
ஆனால் இன்றைக்கு ஆட்சிக்கு வந்திருக்கிறவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்களா? அவர்கள் நிறைவேற்றினோம் என்று சொன்னால் இரண்டு வாக்குறுதிகள் மட்டும் தான், அந்த இரண்டு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டது என்று சொல்ல முடியாது. மக்களை ஏமாற்றுகின்ற வகையிலே அந்த அறிவிப்புகள் அரசாணையாக வந்திருக்கிறது. 200 யூனிட் மின்சாரம் சலுகை அனைவருக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு செய்தார்கள். ஆனால் அந்த சலுகை யாருக்கும் கிடைக்கவில்லை. சலுகைகளை எதிர்பார்த்த மக்களுக்கு இப்பொழுது மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துகின்ற காரியத்தை இந்த புதிய அரசு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை தாண்டி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கின்ற அரசாக இந்த ஆட்சி உள்ளது.
ஒரு லட்சம் விவசாயக்கடன் வாங்கி இருந்தால் வெறும் 5000 தான் தள்ளுபடி செய்கிறார்கள். 95 ஆயிரம் கட்டும் விவசாயிகளுக்கு 5000 ரூபாய் எந்த வகையில் உதவியாக இருக்கும்? என்று விவசாய கடன் தள்ளுபடி குறித்து தவெக அரசை கேள்வி எழுப்பினர். தேர்தலில் இன்று நாம் பெற்றிருக்கின்ற இந்த பாடத்தை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் எதிரிகளுக்கு பாடம் புகட்டுகின்ற வகையில் நமது பணியை தொடர வேண்டும் என்று திமுக தொண்டர்களை கேட்டுக்கொண்டார்.
“ஸ்டாலின் அரசு சொன்னதையும், சொல்லாததையும் செய்கின்ற அரசாக இருந்தது. ஆனால் இந்த புதிய அரசு மக்களை ஏமாற்றுகின்ற அரசாக உள்ளது. இரண்டு மாத காலத்தில் இவ்வளவு பெரிய ஏமாற்றங்கள். இன்னும் தொடர்ந்து இந்த ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கிறதோ அவ்வளவு காலம் தமிழ்நாட்டு மக்கள் ஏமாற்றப்படுவார்கள். தமிழகத்தின் வளர்ச்சி பாதாளத்தில் போகும்” என தவெக அரசின் மீதான மக்கள் அதிருப்திகளை குறிப்பிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.