தமிழ்நாடு

“தாராபுரம் டவுட்தான்..” - விரட்டியடிக்கப்பட்ட தவெக அமைச்சர்! ஆட்டம் காணும் விஜய் அலை.. அழுத்தத்தில் சீனியர்கள்?

செங்கோட்டையன், அருண் ராஜ், பர்வேஸ், ஜெகதீஸ்வரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாராபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில்

Muthu Lakshmi

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரமானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த இடைத்தேர்தல் பலமுனை போட்டியாக மாறியுள்ள நிலையில் பரப்புரைகள் அனல் பறக்கிறது. அக்டோபர் 6 தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தீவிர பிரச்சாரத்தை தொடக்கியுள்ளது அரசியல் கட்சிகள். மேலும் தேர்தல் தொகுதி மக்களிடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது பதவிகளை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பலராலும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அந்த தொகுதி மக்களே பெரும் அதிருப்திக்கு  உள்ளானார்கள். 

இதில் ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக ராஜினாமா செய்தவர்களை அதே தொகுதியில் வேட்பாளர்களாக அறிவித்தது தமிழக வெற்றி கழகம். இது உட்கட்சியியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முன்னாள் நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்காமல், மாற்று கட்சியில்  இருந்து வந்தவர்களுக்கு சீட் கொடுப்பது சரியான அணுகுமுறையல்ல என்று எதிர்ப்புகள் எழுந்தன. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகி, கூட்டணியில் இருந்தவர்களே விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர், அமைச்சர் N ஆனந்த் இரு தொகுதியிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக வீடுகளுக்குச் சென்று பொதுமக்களை சந்திப்பது, அவர்களுடன் உணவருந்துவது, மக்களின் குறைகளை கேட்பது, உள்ளிட்ட செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் தவெக சத்தியபாமா குண்டடம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவரை சந்தித்த அப்பகுதி பொதுமக்களில் சிலர் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் சத்தியபாமாவின் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் “ரூ.50 கோடி பணம் வாங்குனீங்க. ஓட்டு போட்டவங்களுக்கு என்ன பதில்?” என்றும் பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து சத்தியபாமா தனது வாக்கு சேகரிப்பை தொடர்ந்து நடத்தாமல், பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதேபோல், குண்டடம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக சத்தியபாமாவின் பிரசாரத்தின்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் நடந்துள்ளன.

அதற்கு முன் மதுராந்தகத்தில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதத்திடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “பணத்திற்காக கட்சி மாறி சென்றுவிட்டு மீண்டும் வாக்கு கேட்க வருவது எந்த விதத்தில் நியாயம்” என்றும் “எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறு துரோகி துரோகி’’ என கோஷங்கள் எழுப்பினர். மேலும் கருப்புக்கொடி ஏந்தி பிரச்சாரத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போகும் இடங்களில் எல்லாம் மக்களின் அதிருப்தியையும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் தவெக வேட்பாளர்கள், சீனியர்களை களமிறக்கி பார்த்தார்கள். அந்த வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், N ஆனந்த் ஆகியோர் மதுராந்தகத்தில் களமிறங்கினார்கள். நேற்று முதல்வர் விஜய் பிரசாரம் மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். சட்டமன்ற தேர்தல் போலவே திமுக, திமுக எனவும் அதே ஸ்கிரிப்டுடன் பரப்புரை செய்தார்.

அதே பார்முலாவை தாராபுரத்தில் அப்ளை செய்ய நினைத்த தவெகவுக்கு எதுவும் எடுபடுவதாக தெரியவில்லை. நேற்று அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ், பர்வேஸ், ஜெகதீஸ்வரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாராபுரம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மேலும் தாராபுரத்தில் அதிமுக மற்றும் தவெக ஆகிய இரு வீடுகளில் ரகசிய பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். அங்கு இரு கட்சிகளும் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து  வந்துள்ளனர். தாராபுரம் அருகே நஞ்சியம்பாளையம் ஊராட்சியில் தவெக மற்றும் அதிமுக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் கூட இல்லாத நிலையில், தவெக-விற்கு வரும் எதிர்ப்புகள் கூட்டணி காட்சிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையை சரி செய்ய விஜய்யின் பிரச்சாரம் முக்கியமென தாராபுர தவெக-வினர் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் கூட்டணி கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்