

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்தனர். இதனால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தனித் தொகுதிகளான இந்த இரண்டு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இருவரின் ராஜினாமா முடிவும் தொகுதி மக்களிடம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காரணம் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று பின் ராஜினாமா செய்தது மட்டுமின்றி, ஆளும் கட்சியான உடனடியாக தவெக-வில் இணைத்துக்கொண்டனர். தற்போது அந்த தொகுதியில் நடக்க உள்ள இடைத்தேர்தல் பலமுனை போட்டியாக மாறியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் தமிழக தேர்தல் வரலாற்றிலையே பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி ஆட்சி அமைத்து விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம். பின் தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவானது. இதனால் அரசியல் களம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் கவனம் பெற்றுள்ளது.
இரு தொகுதியிலும் வென்ற அதிமுக மீண்டும் வெல்லுமா? அல்லது தவெக அலையே அடிக்குமா? என்று கேள்விகள் எழுந்துள்ளன. மேலும் இந்த வென்ற வேட்பாளர்கள் கட்சி மாறி தவெக சார்பில் போட்டியிடுவதால்.. மக்களின் அதிருப்தி அலை திமுகவுக்கு சாதகமாக அமையுமா? அல்லது தனித்து களம் காணும் நாம் தமிழர் மற்றும் இடதுசாரிகளுக்கு வாய்ப்பளிக்குமா போன்ற கேள்விகளும் எழுகிறது.
இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் தொடர்பாக IPDS (Indian Political Democratic Survey) தேர்தல் ஆய்வு அமைப்பு, செப்டம்பர் 22, 2026 அன்று தனது புதிய கள ஆய்வு மற்றும் கருத்துக்கணிப்பு முடிவுகளை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டது. முக்கிய கள ஆய்வு அறிக்கையின்படி தற்போதைய நிலவரங்கள் குறித்து கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
IPDS அமைப்பின் தலைவர் திருநாவுக்கரசு வெளியிட்ட தகவலின்படி, தற்போதைய இடைத்தேர்தல் களம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு (TVK) மிகவும் சவாலானதாகவும், கடுமையான போட்டி நிறைந்ததாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காரணங்கள் பின்வருமாறு..
குதிரைபேர விவகாரம்
அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று தங்களது MLA பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்த "குதிரைபேர சர்ச்சை" மக்கள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தால் ஏற்பட்ட அதிருப்தி தவெக-விற்கான வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என கருத்துக்கணிப்பு கூறுகிறது. மேலும் ராஜினாமா செய்தவர்களையே வேட்பாளராக தவெக அறிவித்துள்ளது பின்னடைவை சந்திக்க நேரும் என்றும் இந்த அதிருப்தி தவெக-விற்கான வாக்கு வங்கியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
தவெக அரசின் வாக்குறுதிகள் மீதான பார்வை
தவெக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதா என்ற கேள்விக்கு, கள ஆய்வில் பங்கேற்ற மக்களில், நிறைவேற்றவில்லை என 55% பேர், நிறைவேற்றியுள்ளது என 17% பேர், ஓரளவு நிறைவேற்றியுள்ளது என 10% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் பெருமளவு வாக்குறுதிகளில் தவெக அரசின் அணுகுமுறை சரியில்லை என்றும் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
பலமுனை போட்டி நிலவரம்
மதுராந்தத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், திமுக வேட்பாளர் பரந்தாமன் மற்றும் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா மற்றும் அதிமுக வேட்பாளர் பானுமதி ஆகியோருக்கு இடையே நேரடி இழுபறி நீடிக்கிறது. பாரம்பரியமிக்க திராவிடக் கட்சிகளின் (திமுக, அதிமுக) வாக்கு வங்கிகள் இந்தத் தனித்தொகுதிகளில் வலுவாக இருப்பதால், அக்டோபர் 6 அன்று நடைபெறும் வாக்குப்பதிவில் மிக நெருக்கமான வாக்கு வித்தியாசமே இருக்கும் என IPDS அறிக்கை நிறைவு செய்கிறது.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களைக் கடந்துள்ள நிலையில், தங்களின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் கட்சியின் தலைவர் விஜய் உள்ளார். மேலும் சமீபத்தில் இடதுசாரிகளின் தொடர்ந்து வாக்குவாதங்கள் மூண்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் முக்கியம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இரட்டை இல்லை சின்னத்தில் வெற்றி பெற்று, துரோகம் செய்தவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு எடப்பாடி பழனிசாமி தரப்பு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. எதிர்கட்சியாக திமுக செயல்பட்டாலும் மக்களிடம் தங்களது இருப்பை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளது. மேலும் தவெக-வின் குறைகளை சொல்லி, குதிரை பேரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய முக்கிய பங்கு திமுகவிற்கு உள்ளது.
மாநில அளவில் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தாலும், இந்த இடைத்தேர்தலில் தவெக-விற்கு எதிராக சிபிஐ மற்றும் சிபிஎம் தனித்துப் போட்டியிடுவது வாக்கு எண்ணிக்கையைப் பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்