ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி வந்த கரப்பான் பூச்சி கட்சியின் தலைவர்கள் அபிஜீத் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா உள்ளிட்டோர் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டனர். யூடியூபர் துருவ் ரதியும் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஆனாலும், ஜந்தர் மந்தருக்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றனர். போராட்டக்காரர்களைக் கைது செய்ய சுமார் 27,000 காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், கைது செய்யப்பட்டு தொலைதூரக் காவல் நிலையங்களில் விடுவிக்கப்படும் போராட்டக்காரர்கள் மீண்டும் மீண்டும் போராட்டத் திடலுக்கு வருவதால், போராட்டத்தைக் கட்டுப்படுத்துவது காவல்துறையினருக்குக் கடினமாகியுள்ளது.
ஆனால், தலைவர்கள் ஜந்தர் மந்தருக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு அவர்களைக் கைது செய்துள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 1,200 போராட்டக்காரர்களைக் காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே, விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, தான் கைது செய்யப்பட்டாலும் போராட்டம் தொடர வேண்டும் என்று கூறியிருந்தார். ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்துக்கு அந்த அமைப்பின் அமைப்புப் பொறுப்பாளர் அஜிங்க்யா ஷிண்டே தலைமை தாங்குவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அரசு அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கான திட்டமிடலில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் தொடர்ந்து பங்கேற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
பல இளம் வழக்கறிஞர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். பல கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் அவர்களது வீடுகளிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்