தமிழ்நாடு

ஆளுநர் பதவி விலகியபின் பேச வேண்டும்...திமுக உள்ளிட்ட கட்சிகள் பரபரப்பு கூட்டறிக்கை!

Tamil Selvi Selvakumar

பாஜகவை மகிழ்விக்கும் கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்து விலகிய பின்னரே பேச வேண்டும் என திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

ஆளுநர் கருத்துக்கு எதிராக அறிக்கை வெளியீடு:

சமீபத்தில் தமிழ்நாடு ஆளுநர் ”எந்த ஒரு நாடும் மதத்தை சார்ந்துதான் இருக்க முடியும்” என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்தை எதிர்த்து, திமுக, திராவிடர் கழகம், சிபிஎம், விசிக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். 

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஒரு நாடும் மதத்தை சார்ந்துதான் இருக்க முடியும் எனவும், அதில் இந்தியா விதிவிலக்கு இல்லை எனவும் ஆளுநர் தெரிவித்தது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்த கருத்து அனைத்து மதங்களும் சமம் எனக்கூறும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான பேச்சு எனவும், அரசு நடவடிக்கைகளில் மதச்சார்பு கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிடப் பெரிய பதவியை எதிர்பார்த்து பாஜக தலைமையை மகிழ்விக்க கருத்து கூறுவதாக இருந்தால், ஆளுநர் பதவியை விட்டு விலகியபின் பேச வேண்டும், இவ்வாறு அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.