தமிழகத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது பரிணாமத்தை அடைந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இதற்கிடையேதான் மாநிலம் முழுக்க எஸ்.ஐ.ஆர் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. மேலும் இதிலும் பல குளறுபடிகள் உள்ளன.
அதிமுக - பாஜக
தமிழகம் முழுவதுமே எஸ்.ஐ.ஆர் -ஐ ஆதரிக்காத இரண்டே பேர் பாஜக -வும் அதிமுக -வும்தான். எங்கே விஜய் -உடன் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பாஜக-அதிமுக கூட்டணி 8 மாதங்களுக்கு முன்பே உருவானது. மேலும் கூட்டணி அமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், எடப்பாடியை கூட்டணியின் தலைவர் எனவோ, அதிமுக தலைமையில்தான் ஆட்சியையும் அமையும் எனவோ உத்தரவாதமிக்க பேச்சுக்கள் எழாததால், கள அளவில் இந்த கூட்டணி இணையவே இல்லை. அதனால்தான் திமுக துவங்கி அனைவரும் ‘பொருந்தா கூட்டணி’ என விமர்சித்து வருகின்றனர்.
என்ன முரண்கள் இருந்தாலும், ஒரு எதிர்க் கட்சியாக ஆளுங்கட்சியில் உள்ள சிக்கல்களை சாடவேண்டியது இவர்களின் கடமை என்றாலும், அதிமுகவை விட பாஜக அதை சிறப்பாக செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், கொலைகளும் அதிகரித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த தொடர் கொலைகள் குறித்து பாஜக மாநில தலைவர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
திமுகவின் சீரழிந்த ஆட்சிக்கு நேற்று ஒரு நாளே சாட்சி! தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல் குற்றங்களும் 1 கொலை முயற்சியும், காவல்துறை மீதான தாக்குதல் ஒன்றும் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள பத்திரிகைச் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. இது போதாததற்கு, சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கொலை முயற்சி நடந்தது, போதையில் இருவர் காவலரையே தாக்கியது ஆகியவை ஆட்சியில் தலைநகரிலேயே ஏட்டளவுக்குக்கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாக்குகிறது.
ஒரு காலத்தில் முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் போலியாக பெருமை பேசப்பட்ட "இரும்புக்கரம்" நான்கரை ஆண்டுகளாக ஒரு போதும் செயல்படாமல் இத்துப்போய் தற்போது ஒட்டுமொத்தமாக துருப்பிடித்துப் போய்விட்டது என்பதற்கு நேற்று ஒரு நாளில் நடந்த குற்றங்களே சாட்சி!
துருப்பிடித்த இரும்பைக் காயலான் கடைக்குத் தூக்கிப் போடுவது போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை மக்களும் கண்காணா தொலைவில் தூக்கி எறியத் தான் போகிறார்கள்! சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்து, தமிழகத்தைத் தலை நிமிரச் செய்யப் போகிறார்கள்! இது உறுதி! -என அவர் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.