கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (23). அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (25) என்ற இளைஞர் மருந்தகத்திற்குள் நுழைந்து திவ்யாவை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த திவ்யா ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, பெண் ஊழியரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தோஷை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் ஊழியரை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, பட்டப்பகலில் மருந்தகத்திற்குள் புகுந்து பெண் ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இந்த கொடூர கொலை வெறி தாக்குதலுக்கு திமுக நாடாளுமன்றஉறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி சட்டம் ஒழுங்கை தினமும் சர்வ நாசம் செய்துகொண்டிருக்கிறது தவெக அரசு.
பண்ருட்டி சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பையும் அரசு வழங்க வேண்டும். குற்றவாளியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கைப் பராமரிப்பதில் தாமதிக்காமல் இனியாவது இந்தப் பொறுப்பற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா? இல்லை ரீல்ஸ் விளம்பரங்களில் மூழ்கிக் கிடந்து மக்களின் உயிரோடுதான் விளையாடுமா? என்று காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்