கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைகப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.
மேலும் இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் சொன்ன காத்திரமான கருத்துக்களை எதிர்த்துதான் தவெக உச்சநீதிமன்றம் சென்றது, கரூர் சம்பவம் ஒரு ‘Man Made Disaster’, விஜய் -க்கு கொஞ்சம்கூட தலைப்பண்பு இல்லை என கடுமையாக விமர்சித்திருந்தது. அதுவரை கரூர் சம்பவத்திற்கு திமுக மட்டுமே காரணம் என்றிருந்த சூழல் மாறி விஜய் -ம் விமர்சிக்கப்பட்டார்.
ஆனால் நீதிமன்றம் அந்த முறையீட்டை கிடப்பில் போட்டுள்ளது.
மேலும் இந்த மனுக்களை எல்லாம் ஆய்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, “உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எப்படி விசாரித்தது, SIT (சிறப்பு புலனாய்வு குழு) கேட்ட இடத்தில் Sop கொடுக்கப்பட்டது ஏன் என பல கேள்விகளை எழுப்பியது? மேலும் தவெக -வின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர், சாமானிய தனி மனிதரின் கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆனால் பாதிக்கப்பட்ட மனுதாரர் 2 பேரில் ஒருவர் அதிமுக -வை சார்ந்தவர் என்றும் மற்றொருவர் தவெக -வை சார்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது, மேலும் எடப்பாடி பாஜக துணையோடு நீதிமன்றத்தையே ‘influence’ செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில்தான் நீதிமன்றம் அமைத்த புலனாய்வு குழுவை சற்று உற்றுநோக்க வேண்டும், இது வெறும் SIT மட்டுமல்ல CBI -உடன் கூடிய ஒரு விசாரணை குழுவாக அமைந்துள்ளது. கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் இத்துணை தீவிரமாக இந்த விவகாரத்தில் தலையிடுகிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால் இந்த CBI விசாரணை தமிழக அரசுக்குத்தான் பின்னடைவாக அமையும், மாநில போலீசின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால்தான் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாநில அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு ஆகியவற்றையும் உச்சநீதிமன்றம் சஸ்பண்ட் செய்துள்ளது.
இது உண்மையிலேயே தமிழக வெற்றிக் கழகத்திற்கு சாதகமான ஒரு தீர்ப்புதான், அவர்கள் இதன் மூலம் தங்கள் மீது விழுந்த ‘கொலை’ குற்றச்சாட்டை மறுக்க வாய்ப்பாக அமையும்.ஆனால் இந்த தீர்ப்பு மிக முக்கியமான ஒரு ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.