தமிழ்நாடு

“கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்” -  அவசர வழக்காகும் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு!

திமுக தாக்கல் செய்த வழக்கை, அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

Muthu Lakshmi

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய பேச்சு புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர் நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெறும் விசாரணையை பாதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள திமுக, அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. அதையடுத்து கரூர் வழக்கு குறித்து ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருக்கு எதிராக திமுக தாக்கல் செய்த வழக்கை, அவசர வழக்காக நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.

சமீபத்தில் நடந்த மாற்று கட்சியினர் தவெக-வில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "கரூரில் எங்களுக்கு ஒரு முக்கியமான கணக்கு இருக்கிறது. அதை முடிக்காமல் விட போவதில்லை. எங்கள் தலைவர் மீது கை வைத்தீர்கள். எங்கள் மக்கள் மீது கை வைத்தீர்கள். ஸ்டாலின் அவர்களே, உங்களுடைய மகன் உதயநிதியின் அரசியல் வாழ்க்கைக்காக எங்களுடைய மக்களை காவல்துறை மூலம் கொன்று குவித்தீர்கள். அதற்கான பதில் கிடைக்கும். சட்டம் தனது கடமையை செய்யும். கரூரில் என்ன நடந்தது என்பதை அருகில் இருந்து பார்த்தவன் நான்" என்று பேசினார்.

மேலும், கரூரில் திட்டமிட்டு கூட்டநெரிசல் உருவாக்கப்பட்டதாகவும், திருப்பூரிலும் காவல்துறை ஒத்துழைப்பு இல்லாததால் அதேபோன்ற கூட்டநெரிசலை உருவாக்கும் சூழ்ச்சி நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். கரூர் மக்களின் கண்ணீருக்கும் பாவத்திற்கும் சேர்த்துதான் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியை தழுவியதாகவும், அதிமுக–தவெக கூட்டணி ஆட்சியில் மு.க. ஸ்டாலின்தான் கடைசி முதல்வர் என்றும் பேசினார். மேலும், "கொள்ளையடித்த பணத்துடன் லண்டனுக்கு செல்லுங்கள்" என்றும் அவர் விமர்சித்தார்.

இந்த பேச்சுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்து, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகள் விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தமிழக அமைச்சர்கள் முக்கிய சாட்சிகளை தீவிரமாக பாதிக்க முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவை நாளை ஜூலை 7-ஆம் தேதி அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

பகுதி நேர நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் ஹுசைஃபா அஹ்மதி ஆஜராகி, "இந்த நீதிமன்றம் ஏற்கனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது அமைச்சர்களாக உள்ள சில குற்றம் சாட்டப்பட்டவர்கள் சாட்சிகளைத் தீவிரமாக பாதிக்க முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளோம்" என்று தெரிவித்தார். அதற்கு பதிலளித்த நீதிபதிகள், "இந்த மனுவை நாளை விசாரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் வெளியிட்ட பொதுக் கருத்துகள், நீதிமன்றக் கண்காணிப்பில் நடைபெற்று வரும் சிபிஐ விசாரணையை பாதிக்கும் அபாயம் இருப்பதாக திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாணைகள், அரசு வேலை நியமனங்கள் மற்றும் பிற நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முதல்வர் விஜய் ஜூலை 10-ஆம் தேதி கரூர் செல்ல உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களையும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அப்போது முக்கிய சாட்சிகளாக உள்ள உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் நடைபெறும் சந்திப்புகள் சிபிஐ விசாரணையை பாதிக்காத வகையில் இருக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி, கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, "இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. எனவே நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை அவசியம்" என்று குறிப்பிட்டு சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக வெற்றி கழகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் அமைத்து சிபிஐ விசாரணையை கண்காணிக்க உத்தரவிட்டது. மாநில அரசு அமைத்திருந்த சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) மற்றும் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து, சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.