“இது வெறும் ட்ரெய்லர் தான்” - தவெகவில் இணைந்த விஜயபாஸ்கர் பேச்சு! தேர்தலுக்கு முன்னே போடப்பட்ட பிளானா இது? 

விஜய் அவர்களின் தலைமையிலான TVK ஆட்சியும் என்றென்றும் நிலைத்திருக்கும்
விஜயபாஸ்கர்
Published on
Updated on
2 min read

அதிமுகவில் இருந்து விலகி தங்களது பதவியை ராஜினாமா செய்த சி. விஜயபாஸ்கர் மற்றும் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர், அவர்களது ஆதரவாளர்களோடு தவெக-வில் இணையும் விழா இன்று மாமல்லபுரத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் தவெக அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தவெகவில் தன்னை இணைத்து கொண்ட பின் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் பேசியதாவது "இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள அனைத்து மாண்புமிகு அமைச்சர்களையும் நான் வரவேற்கிறேன். இன்று TVK-வில் இணைவதற்கான வழியைக் காட்டிய பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கும் நன்றி. இன்று அலைகடலென அதிமுக தொண்டர்கள் இங்கு திரண்டு வந்துள்ளனர். தீய சக்தியான திமுகவை ஒழிப்பதற்காகவே 1972-ல் எம்ஜிஆர் அவர்களால் அதிமுக தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கிய 5 ஆண்டுகளில் ஆட்சியை அமைத்தவர் எம்ஜிஆர். ஆனால் நமது முதல்வர் விஜய் அவர்கள் வெறும் இரண்டே ஆண்டுகளில் அதைச் செய்து வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். இந்த அரசியல் மாற்றம் என்பது ஒரு தலைமுறை மாற்றமாகும்.” என்று முதல்வர் விஜயை புகழ்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜெயலலிதா அவர்களும் தீய சக்தியான திமுகவை ஒழிக்கவே பாடுபட்டார். அவர்களின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி அவர்களின் தவறான முடிவுகளால் கட்சி இன்று தடுமாறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் எங்களைத் துரோகிகள் என்று அழைக்கிறார்கள்; ஆனால், உண்மையில் திமுகவுடன் கைகோர்க்கத் திட்டமிட்டது அவர்கள்தான்” என்றும் திமுக-அதிமுக கூட்டணி அமைக்க முயற்சித்ததாக குறிப்பிட்டார்.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு அந்த தொகுதி TVK-விற்கு ஒரு கரும்புள்ளியாக அமைந்தது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு திமுகவின் பண பலத்தையும் மீறி நாங்கள் கரூர் தொகுதியில் வெற்றி பெற்றோம். இன்று, அதிமுகவின் அனைத்து நிர்வாகிகளும் TVK-வில் இணைந்துள்ளனர். அதிமுக தலைமை அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அவர்கள் திமுகவுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கவே திட்டமிட்டனர். தளபதி விஜய் அவர்களால் இந்த அரசியல் மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. அதிமுகவைப் போலவே தமிழ்நாட்டில் விஜய் அவர்களின் தலைமையிலான TVK ஆட்சியும் என்றென்றும் நிலைத்திருக்கும். நாங்கள் உண்மையாக உழைப்போம்” என்று தனது உரையை முடித்திருந்தார்.

சி. விஜயபாஸ்கர் கடந்த ஜூன் 16-ம் தேதி தனது MLA பதவியை ராஜினமா செய்தார். அதையடுத்து தற்போது தன்னை தவெக-வில் இணைத்து கொண்டார். சி. விஜயபாஸ்கர் விழா மேடையில் பேசியதாவது, “தேர்தலுக்கு முன்பே, டி.வி.கே (TVK) கட்சியுடன் கூட்டணி அமைக்குமாறு எங்கள் கட்சித் தலைமையிடம் நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை. தேர்தலுக்குப் பிறகும் TVK-வை ஆதரிக்குமாறு கூறினோம். அதையும் அவர்கள் கேட்கவில்லை. ஆனால்  இவை அனைத்தையும் புறக்கணித்த தலைமை இப்போது இயல்புக்கு மாறாக திமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைக்கிறது அதை நாங்கள் ஏற்கவில்லை. இப்போது உண்மையான தலைமை கொண்ட ஒரு அமைப்பை நாங்கள் அடைந்துள்ளோம். அந்தத் தலைவரின் கீழ் உற்சாகத்துடன் பணியாற்ற ஆவலாக உள்ளோம்.

தமிழகத்திற்கும் TVK-விற்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்ற மக்களின் தீர்ப்பை ஏற்று, வரவிருக்கும அனைத்துத் தேர்தல்களிலும் TVK கட்சி வெற்றி பெறும். பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களே இன்று நீங்கள் காண்பது வெறும் முன்னோட்டம் (டிரெய்லர்) மட்டுமே உயர் தலைமையின் ஒப்புதல் பெற்ற பிறகு டெல்டா பகுதியில் நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியில் எங்கள் முழு வலிமையையும் அதாவது முழுத் திரைப்படத்தையும்  நாங்கள் வெளிப்படுத்துவோம்”.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com