கரூர் கொடுந்துயரம் தொடர்பான வழக்கை சென்னையில் விசாரித்ததை விமர்சித்ததாக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சமூக ஊடகவியலாளர் கிஷோர் கே ஸ்வாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஊடகவியலாளரும், அரசியல் விமர்சகருமான கிஷோர் கே ஸ்வாமி தாக்கல் செய்துள்ள மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 41 பேர் மரணமடைந்தது தொடர்பாக மதுரை கிளையில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஒரு வழக்கை மட்டும் சென்னையில் விசாரித்த தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தின் தனது பக்கத்தில் அக்டோபர் 3 ஆம் தேதி, "யார் யாருக்கு தலைமைத்துவ பண்பு இருக்கிறது என்பதை ஆராய்வது நீதிமன்றத்தின் வேலை கிடையாது. சட்டம் மீறப்பட்டிருந்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கலாம். மற்ற கருத்துக்கள் அவசியமற்றது.” என்று பதிவிட்டிருந்தகாகவும், அதுதொடர்பாக ஆலந்தூரை சேர்ந்த கே. நன்மாறன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், தன் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் ஆபாசமான செயல்பாடு (296), கலவரத்தை தூண்டுதல் செய்தல் (192 ), பகைமையை ஊக்குவித்தல் (196), பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அறிக்கை வெளியிடுதல் (353) ஆகிய நான்கு பிரிவுகளிலும், தகவல் தொழிநுட்ப சட்டத்தின் 67 வது பிரிவான மின்னணு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதுதொடர்பான விசாரணை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது பதிவில் எந்தவிதமான ஆபாசமான வார்த்தைகளும் இல்லாத நிலையில் அவதூறு மொழியை பயன்படுத்தியதாகக் கருத முடியாது என்பதால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு குற்றவியல் வழக்கறிஞர் எஸ். சந்தோஷ் ஆஜராகி பதவியில் இருக்கும் நீதிபதி மீது உள்நோக்கம் கற்பித்துள்ளதாகவும், அது நியாயமான விமர்சனம் இல்லை என்றும், அதிலிருந்து அவர் தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
இதுபோன்ற குற்றத்தை மனுதாரர் தொடர்ந்து செய்வதாலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களுக்கு பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை ரத்து செய்யக் கோரிய கிஷோர் கேஎ ஸ்வாமியின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.