delimitation speech in vijay  
தமிழ்நாடு

‘Delimitation’ குறித்து முதல் முறையாக வெளிப்படையாக பேசிய முதல்வர் விஜய்.. நமக்கான இடத்தை யாராலும் பறிக்க முடியாது என உறுதி!

மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். என் வாழ்க்கையில் அதிக வலியும், ஆறாத காயமும் கொடுத்தது கரூர் சம்பவம் தான்...

Mahalakshmi Somasundaram

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு முதல்முறையாக கரூர் மாவட்டத்திற்கு இன்று  வந்த முதலமைச்சர் ஜோசப் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது கரூர் சம்பவம், திமுக மீதான விமர்சனங்கள், 'பார்ட்டி பண்ட்' சர்ச்சை ஆகியவற்றை குறித்து பேசியதுடன், நாடு முழுவதும் விவாதமாக உள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் குறித்தும் முதல் முறையாக தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக பதிவு செய்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் மிகப்பெரிய சோக நிகழ்வாக பதிவானது. அந்த சம்பவத்திற்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற விஜய், முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து மக்கள் சந்திப்பு மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பணிநியமனம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய விஜய், "மக்களுக்காக அரசியலுக்கு வந்தவன் இந்த விஜய். என் வாழ்க்கையில் அதிக வலியும், ஆறாத காயமும் கொடுத்தது கரூர் சம்பவம் தான். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் அந்த காயத்தை என்னால் மறக்க முடியாது. என் அக்கா, தங்கைகள், குழந்தைகளை அந்த சம்பவத்தில் இழந்தேன். அந்த பழியையே என் மீது சுமத்தினார்கள்" என்று உருக்கமாக பேசினார்.

தொடர்ந்து, "அப்போது இருந்த காவல்துறையை முழுமையாக நம்பினேன். கரூரில் கூட்டம் அதிகமாக இருப்பதாக நினைத்திருந்தால், காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர்கள் என்னை கூட்டத்திற்குள் அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களது திட்டம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. பின்னர் நடந்த சோகத்திற்கு என்னையே பொறுப்பாக்க முயன்றனர். வாய் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசக் கூடாது நமக்கு இவ்வளவு வலியும் காயங்களும் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் நல்ல பதிலடி கொடுத்துவிட்டீர்கள். ஆனால் அது மட்டும் போதாது. இனி காலம் முழுவதும் அவர்கள் எழுந்திருக்க முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலை மக்கள் கொடுக்க வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் முதன்முறையாக தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தனது நிலைப்பாட்டை பதிவு செய்த விஜய், "மத்திய அரசு மீண்டும் Delimitation கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.. யார் என்ன Delimitation கொண்டு வந்தாலும் அதை தமிழ்நாடு ஒப்புக்கொள்ளாது, நமக்கான இடத்தை யாராலும் பறிக்க முடியாது.. பறிக்கவும் விடமாட்டோம்” என கூறி கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக எந்த முடிவும் எடுக்கக் கூடாது. தமிழ்நாட்டின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது. மத்திய அரசு நினைத்தது நடக்காது. தமிழகத்தின் குரலை எங்கள் அரசு உறுதியாக ஒலிக்கச் செய்யும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, "நமக்காக வந்த மக்களை காக்க வைத்து அரசியல் ஆதாயம் தேடுபவன் நான் அல்ல. பணத்தைவிட எனக்கு மக்கள் முக்கியம். நம்பிக்கையுடன் இருங்கள்... நல்லதே நடக்கும்" என்று கூறி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்