நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் புதிய மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு இந்த இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கை கோர்க்கலாம். ஒன்றிணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களைச் செய்வோம்” என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ‘மக்கள் மேடை’ இயக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மக்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் திறமைகளை ஒருங்கிணைக்கும் தளமாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்கள் முதல் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களின் யோசனைகள் மற்றும் பங்களிப்புகளை ஒன்றிணைப்பதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்கும், ஒவ்வொரு தொகுதியின் வளர்ச்சிக்கும் பாடுபடக்கூடிய புதிய உள்ளூர் தலைவர்களை உருவாக்கும் திட்டமும் இந்த இயக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதன்மூலம் சமூக சேவையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் நடிகர் ரஜினிகாந்தின் வருகை குறித்து பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும், உடல்நலக் காரணங்களையும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அவர் அறிவித்திருந்தார். இது அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கிய ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், லதா ரஜினிகாந்த் தொடங்கியுள்ள ‘மக்கள் மேடை’ இயக்கம் அரசியல் இயக்கமாக மாறுமா? அல்லது சமூக சேவை அமைப்பாக மட்டுமே செயல்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் வெளியாகாத நிலையில், இந்த இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது அரசியல் வட்டாரங்களும், ரஜினி ரசிகர்களும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும் அண்ணாமலையும் "நம்ம இயக்கம்" என்னு இயக்கத்தை தொடங்கி இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருவதாகவும், இதுவரை சுமார் 7.6 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்