2 வருடத்திற்கு முன்பு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் தனது கட்சியை தொடங்கினர். இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி வெகுஜன மக்களிடம் விரைவாக சென்றடைந்தது. திராவிட கட்சிகளால் சலிப்படைந்த மக்கள், இளைஞர்கள், பெண்கள் என்று பலரும் தங்களது வாக்குகளை விஜய்க்கு செலுத்தினர். அரசியலுக்கு விஜய் வரவே மாட்டார், ஆட்சியை பிடிக்கவே முடியாது என்று பலரும் கூறிய நிலையில் அவர் அவர்களின் முற்றுப்புள்ளிகளை காற்புள்ளியாக்கி இன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார் தவெக தலைவர் விஜய். அரசியலுக்கு வர நினைக்கும் பலருக்கும் விஜயின் அரசியல் வருகை ஒரு உத்வேகமாகேவ இருக்கிறது. அந்த வரிசையில் சில நடிகர்களும், சில அரசியல் பிரபலங்களும் புதிதாக கட்சி தொடங்கி அரசியலுக்கு வர நினைக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாக தெரியவிட்டாலும் அவ்வப்போது வெளியே எட்டிப்பார்த்து செல்கிறது.
அந்த வரிசையில் தற்போது அரசியலுக்கு அண்ணாமலை வரவிருக்கிறார் என்ற பேச்சும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் பொருளாக இருந்துவருகிறது. "அவர்தான் ஏற்கனவே பாஜக-வில் அரசியல் பயணத்தில்தான் இருக்கிறாரே" என்று நீங்கள் கேட்டால்.. உங்களுக்கு ஒரு செய்தி, அவர் புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்கவிருக்கிறார், அதுவும் நடிகர் ரஜினிகாந்தை பின்புலத்தில் வைத்து தனது அரசியல் காயை நகர்த்தவிருக்கிறார் என்று அரசல் புரசலாக செய்திகள் உலாவி வருகின்றன. ஒருவேளை அது உண்மை என்றால் அரசியல் களத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படலாம்? ஒரு சின்ன பார்வை.
சமீபகாலமாகவே பாஜக அண்ணாமலையை ஒதுக்கி வருகிறதா? என்ற கேள்வியை முன்வைக்கும் அளவிற்கு சில நிகழ்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. அதில் முக்கியமாக மார்ச் 29ம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை கோயம்புத்தூர் விமானநிலையத்தில் வரவேற்பதற்கான வரவேற்பாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் இடம்பெறவில்லை. கோவையின் வலுவான பகுதிகளில் தேர்தலில் நின்று வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய அண்ணாமலைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதாவது அதிமுக கோயம்புத்தூர் வடக்கு தொகுதியை மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கியதால் ஏமாற்றமடைந்தார். அதன் பின்பு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், தீவிர பிரச்சாரங்களில் ஈடுபடப்போவதில்லை என்று கூறினார். அதன் பின்னர் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பினை தெரிவித்தார். 'CBSE' பாடத்திட்டத்தில் திணிக்கப்பட்டுள்ள மும்மொழி கொள்கையை விமர்சித்து தனது 'X' பக்கத்தில் கருத்தினை தெரிவித்திருந்தார். இதனை பார்க்கும் போது "அண்ணாமலை பாஜகவில் இருந்து தன்னை விலக்கிக்கொண்டுள்ளாரோ?" என்ற கேள்வியை கொஞ்சம் எழவைக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில்தான், அண்ணாமலை ஒரு புதுக்கட்சி ஆரம்பிக்க போவதாக ஒரு செய்தி அமைதியாக பரவி வருகிறது. இதற்கு பின்புலமாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுவர் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு ஒருவேளை நடந்தால் என்னவாகும்?. அவ்வாறு அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டால், பாதி இளைஞர் பட்டாளம் அண்ணாமலை பக்கம் செல்ல வாய்ப்பிருக்கிறது. தற்போது இருக்கும் ஆட்சியின் மீது வரும்காலத்தில் அதிருப்தி ஏற்பட்டால் அந்த இளைஞர்கள், முதல் முறை வாக்கு செலுத்துவோர், மாற்றம் எதிர்பார்க்கும் இளைஞர்கள் போன்றோர் அண்ணாமலைக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளது. மேலும், தற்போதுவரை அண்ணாமலைக்கென்று இளைஞர்கள் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலும், பெண்களின் வாக்குகளும் அண்ணாமலை பக்கம் செல்லலாம். அவர் IPS-ஆக இருந்த ஒருவர் என்ற காரணத்தால் அவர் மீது மிகுந்த மரியாதையோடு பலரும் இருப்பதால் பலரது வாக்குகள் அண்ணாமலை பக்கம் செல்லலாம்.
மேலும், ரஜினி காந்த் ரசிகர்கள் மொத்தமாக அண்ணாமலை பக்கம் செல்லலாம். அண்ணாமலையின் அரசியல் கட்சியை நடிகர் ரஜினிகாந்த் பின்னாலிருந்து இயக்கும் பட்சத்தில் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது, ஏற்கனவே விஜய் ரசிகர்கள் மீது கோபத்தில்தான் ரஜினி ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும், அரசியலில் இன்று வரை ரஜினியின் செல்வாக்கு குறையவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மாநிலம் முதல் மத்திய அரசு வரை தனது செல்வாக்கை தக்கவைத்திருப்பவர் ரஜினிகாந்த். அதிலிருந்து பார்த்தால் ஒருவேளை வாக்குகளும், அரசியல் சூழலும் ஒரு பக்கம் அடிக்கும் காற்று போல் ரஜினிகாந்த் மற்றும் அண்ணாமலை பக்கம் அடிக்க வாய்ப்பிருக்கிறது.
"இதுமட்டும்தானா? என்று கேட்டால்.. இல்லை". ரஜினிகாந்த் - அண்ணாமலை 'காம்போ' உருவாகும் பட்சத்தில் நடிகர் சூர்யா கூட அரசியலுக்கு வரலாம். அவர் படிக்கும் மாணவர்களுக்கு 'அ' எழுத கரம் கொடுத்த 'அகரம்' அறக்கட்டளையின் மூலம் பல்வேறு மாணவர்களின் மருத்துவ கனவு, படிக்கும் கனவுகளை நினைவாக்கி வைத்தவர். அவர் நடித்த கருப்பு படத்தின் கருப்ப சாமியாகவே நிஜத்தில் பல குடும்பங்கள் அவரை பார்த்துவருகின்றன. அந்த நிலையில் சூர்யா அரசியலுக்கு வர வாய்ப்பிருக்கிறது. மேலும், மக்களும் அவருக்கு வாக்களிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. இவரது தொண்டினை காலம் காலமாக மக்கள் கண்ணார பார்த்துவருவதால் ஒருவேளை இது நடக்கலாம். இயக்குநர் பா. ரஞ்சித் கூட அரசியலில் கால்பதிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. குரலற்றவர்களின் குரல்களை தனது திரைப்படத்தின் வாயிலாக கலை நயத்தோடு அவர் கூறும் பாணிக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். சமூகம் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு தனது கருத்தினை பதிவிட்ட வண்ணமே இருக்கிறார். அந்த வரிசையில் அரசியல் பயணத்தில் பா. ரஞ்சித் வர வாய்ப்பிருக்கிறது.
எது எப்படி இருந்தாலும், இந்த யூகங்கள் வெறும் யூகங்களாக மட்டுமே இருக்க வாய்ப்பு குறைவுதான் என்றாலும், இதுவரை உறுதி செய்யப்படாத ஒரு அரசியல் வதந்தியாகவே இது இருந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக யார் அரசியலுக்கு வந்தாலும், "நமக்கு நல்லது செய்வார்களா?" என்ற ஒற்றை கேள்வியையும், மாற்றத்திற்கான கனவுகளோடும் மட்டுமே மக்கள் இருப்பார்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.