தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் என்றும், தொடர்ந்து நவம்பர் 15-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நவம்பர் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், நவம்பர் 14 முதல் 16-ஆம் தேதி வரை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், நவம்பர் 15 முதல் 17-ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் நவம்பர் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மீனவர்கள் நவ 14- 20ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் நவ-13ம் தேதிக்குள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பர் 12ம் தேதி அன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதையடுத்து நவம்பர் 13ம் தேதி கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். மேலும் அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதைத்தொடர்ந்து நவம்பர் 14ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்