AIADMK Candidate Selection 
தமிழ்நாடு

“மரகதம் விட்டுச் சென்ற தொகுதி.. மீண்டும் அதிமுக வசமாகுமா?” - காயத்ரி தனபால் vs கனிதா சம்பத்.. தலைமைக்கு வந்த புதிய தலைவலி!

பரிச்சயமான அரசியல் முகமாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது...

Mahalakshmi Somasundaram

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் நடந்த அரசியல் மாற்றங்களில் சில தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாபஸ் பெற்ற நிலையில் அந்த தொகுதிகள் தற்போது காலியாக உள்ளது. இந்த நிலையில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு (அக் -06) இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் நடைபெற்று வரும் நிலையில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களும் பெறப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இருவரது பெயர்கள் முக்கியமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக அக்கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தனபாலின் மனைவியான காயத்ரி தனபால் வேட்பாளராக களமிறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் பேரூராட்சி தலைவராக பதவி வகித்துள்ளதுடன், மதுராந்தகம் தொகுதியில் பரிச்சயமான அரசியல் முகமாக இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

kanitha sambath

அதேபோல், அதிமுக மகளிர் அணி மாநில இணைச் செயலாளரும், தலைமை பொதுக்குழு உறுப்பினருமான கனிதா சம்பத்தின் பெயரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. கனிதா சம்பத் கடந்த 1996-ம் ஆண்டு அதிமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அதிமுக மாவட்ட பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். மேலும் கடந்த 2001-2006 காலகட்டத்தில் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியிலும், 2011-2016 காலகட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இதனிடையே 2021 மற்றும் 2026 சட்டமன்ற தேர்தல்களில் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட கட்சி தலைமையிடம் விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சில காரணங்களால் சென்ற தேர்தல்களில் மரகதம் குமரவேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் கனிதா சம்பத்துக்கு, தற்போது மதுராந்தகம் இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

Gayathri Dhanapal

இதனால், காயத்ரி தனபால் மற்றும் கனிதா சம்பத் ஆகிய இருவரில் யாருக்கு அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மதுராந்தகம் தொகுதி அதிமுகவினர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றும் அரசியல் காரணங்களுக்காக அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக உறுப்பினர்களுக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கட்சியின் தலைமை மிகுந்த பொறுப்புடன் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் கட்டாயம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்