

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் உள்ளிட்ட விவகாரங்களைக் குறிப்பிட்டு பேசியிருந்த நிலையில், அவரது கருத்துக்கு முன்னாள் திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பரந்தாமன், “தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு மற்றும் மிசா காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்க்கு முழுமையான புரிதல் இல்லை” என விமர்சித்தார்.
மேலும், கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், “கரூரில் மனித உயிர்கள் எல்லாம் மயங்கி விழுந்தார்கள்.. சாகிறார்கள். அதை பார்த்தும் கூட பார்க்காதது போல பாட்டு பாடி பிரச்சாரம் செய்த சைக்கோ விஜய்க்கெல்லாம் தமிழ்நாட்டின் தியாக வரலாறு பற்றி தெரியாது. எங்களுடைய தலைவர் மிசா தியாகத்தைப் பற்றி தெரியாது” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “1970-ல் போடப்பட்ட சர்க்காரியா கமிஷனுக்கும், 2026 காவல்துறை மானியக் கோரிக்கைக்கும் என்ன சம்பந்தம்? கொஞ்சமாவது மூளை இருக்கா... கொஞ்சமாவது தெளிவு இருக்கா? நீங்கள் எதை நோக்கிப் போகிறீர்கள்? காவல்துறை மானியம் குறித்து பேசாமல், எல்லாமே திமுக, திமுக என்றால், உனக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்?” என கேள்வி எழுப்பினார். மேலும், “பாஜக ஆட்சிக்கு வந்து 15 ஆண்டு காலம் நேரு, நேரு என்றே போனது. திமுகவின் ED-யை எடுத்துப் பேசுகிறீர்களே.. காங்கிரசுக்கு இல்லாத ED-யா?” என்றும் பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.
“திமுகவை விமர்சிப்பதற்காக சட்டப்பேரவையைப் பயன்படுத்த வேண்டுமா? அதற்காக தனியாக மேடை அமைத்துப் பேசலாம். மக்கள் வரிப்பணத்தில் நடைபெறும் சட்டப்பேரவையில் மக்களுக்கான பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் அரசின் செயல்பாடுகள், மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாகம் குறித்து பேசுவதற்குப் பதிலாக தொடர்ந்து திமுகவை விமர்சிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, மிசா சட்டம் தொடர்பாக தவெக தரப்பில் அமைச்சர் CTR நிர்மல் குமார் தெரிவித்த கருத்துகளுக்கும் பரந்தாமன் காட்டமாக பதிலளித்தார். “மிசா சட்டத்தில் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று நிர்மல் குமார் பேசியதற்கு, திருட்டு சர்டிபிகேட் வாங்கிய நிர்மல் குமார் அவர்களே.. மிசா சட்டம் வேறு, குண்டர் தடுப்புச் சட்டம் (குண்டாஸ்) வேறு. சட்டம் தெரிந்துகொண்டு பேசுங்கள்” என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.