தமிழ்நாடு

+2 தேர்வில் முறைகேடு..! நிறுத்திவைக்கப்பட்ட 32 மாணவர்களின், தேர்வு முடிவுகள் நிலை..?

Malaimurasu Seithigal TV

கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி உதகை அருகே உள்ள சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கணித தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் உதவி செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இது தொடர்பாக கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அப்பள்ளியில் அறை எண் 3 மற்றும் 4 -ல் கணித தேர்வு எழுதிய  34 மாணவர்களுக்கு கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி மற்றும் நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனியசாமி தலைமையிலான அதிகாரிகள் மாணவர்களிடம் தனி, தனியாக விசாரணை நடத்தி, விசாரணை அறிக்கையை கடந்த 9ம் தேதி சென்னை தமிழ்நாடு தேர்வு ஆணையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இப்பள்ளியின் கணித தேர்வு விவகாரத்தில் 34 மாணவர்களின் கணித தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கணித பொதுத்தேர்வு எழுத இரண்டு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியது தொடர்பாக இரண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாமல், தற்போது 32 மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கணித தேர்வில் ஒரு மாணவர் மட்டும் தோல்வி அடைந்துள்ள நிலையில் 31 மாணவர்கள் கணித தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.