தமிழ்நாடு

“புகார் கொடுக்க வந்தவர்… காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை” - ஓரிரவில் நடந்தது என்ன.. முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள்!

அவர் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கூறிய போலீசார், அவரை காவல் நிலையத்திலேயே இரவு தங்க வைத்துள்ளனர்...

Muthu Lakshmi

மதுரை செக்காணூரணி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் மதுரை சேர்ந்த நாகராஜ் என்ற ஏலக்காய் வியாபாரியிடம் ஓட்டுனராக பணியாற்றி வரும் நிலையில், கடந்த 03 ம் தேதி போடியில் இருந்து  மதுரைக்கு லாரியில் ஏலக்காய் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாலாந்தூர் என்ற இடத்தில் லாரி எரிந்து விட்டதாக கூறி புகாரளிப்பதற்காக நேற்றிரவு மதுரை செக்கானூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அவர் அளித்த புகாரில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரை காவல் நிலையத்திலேயே போலீசார் இரவு தங்க வைத்துள்ளனர். காவல் நிலைய ஆய்வாளர் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தவர், இன்று காலை காவல்நிலைய கழிவறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது.

விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்ட விவாகத்தில் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தான் அளித்த புகார் மூலம் தானே போலீசாரிடம் சிக்கிக் கொண்டதால் பயத்தில் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய வெளியே சென்றபோது, அவர் காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, மதுரை மாவட்ட எஸ்.பி தேவநாதன் நேரில் விசாரணை நடத்தி வருவதால், செக்கானூரணி  காவல் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மரணத்தின் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக கூறி செக்கானூரணி பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்றுள்ளனர். தொடர்ந்து செக்கானூரணி காவல் ஆய்வாளர் முத்து கிராம பொதுமக்களிடம் விசாரணை என்ற பெயரில்  காரணம் இன்றி  அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக  குற்றம் சாட்டி  வருகின்றனர்.

விசாரணைக் கைதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்  தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்படுகிறது. இதுகுறித்து பேசிய தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி, காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சம்பவம் குறித்த முழுமையான உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும்,விஜேந்திர பிதாரி காவல் நிலையத்தில் மரணம் நிகழ்ந்துள்ளதால், நடைமுறைப்படி நீதித்துறை விசாரணை நடத்தப்படும். மேலும், இந்த வழக்கின் விசாரணை சிபி-சிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றி ஒப்படைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். மேற்கண்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், சம்பவத்தின் போது காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.