கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தில் செல்போன் டவர் ஒன்று அமைந்துள்ளது. இந்த டவரில் வடக்குத்திட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளமாறன் என்பவர் குடிபோதையில் ஏறியுள்ளார். சுமார் 250 அடி உயரத்திற்குச் சென்ற அவர், கீழே இறங்க மறுத்து அங்கேயே இருந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மூன்று துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
டவரின் உச்சியில் இருந்த இளமாறனிடம் தீயணைப்புத் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, பத்திரமாகக் கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் இறங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் டவரில் ஏறி அவரை மீட்க முயன்றனர். அப்போதும் இளமாறன் கீழே இறங்க ஒத்துழைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் கீழே குதித்துவிடக்கூடும் என அஞ்சிய தீயணைப்புத் துறையினர், தங்களது முயற்சியைக் கைவிட்டு கீழே இறங்கினர். தொடர்ந்து செல்போன் மூலம் அவரைத் தொடர்புகொண்டு சமாதானப்படுத்தி இறங்க வைக்க முயன்றனர்.
அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இதையடுத்து சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஆகாஷ்என்பவரை டவரின் மீது ஏற்றி, இளமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆகாஷ் தொடர்ந்து பேசி அவரைச் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, அதிகாலை 2 மணியளவில் இளமாறன் பத்திரமாகக் கீழே இறக்கப்பட்டார். கீழே இறக்கப்பட்ட இளமாறனிடம், டவரில் ஏறியதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வருவதாகவும், அந்தப் பெண் தன்னிடம் சரியாகப் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்தப் பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் “எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைங்க” எனக் கூறியே டவரில் ஏறியதாகவும் அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து இளமாறனை எச்சரித்த அதிகாரிகள், அவரை அவரது பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். காதல் விவகாரத்தில் 250 அடி உயர செல்போன் டவரில் ஏறிய இளைஞரால் நள்ளிரவு முழுவதும் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்