மதுராந்தகம் அருகே பிரச்சாரத்திற்கு வந்த தமிழக வெற்றி கழக வேட்பாளருக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தனித் தொகுதிக்கு வருகின்ற அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழக கட்சியின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் வேட்பாளராக போட்டியிடுகிறார். குறிப்பாக மரகதம் குமரவேல் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்ற நிலையில் அரசியல் சூழல் காரணமாக அதிமுகவில் இருந்து விலகி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து பிறகு தவெக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மீண்டும் தமிழக வெற்றி கழகம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பாளராக மரகதம் குமரவேலை அறிவித்தது.
தற்பொழுது தவெக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் மரகதம் குமரவேல் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வாக்கு சேகரிக்கும் மரகதம் குமரவேல் அவர்களுக்கு பல்வேறு கிராமங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மொரப்பாக்கம், தண்டலம், பெரும்பாக்கம், கழனிபாக்கம், ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபடும் மரகதம் குமரவேல், பெரும்பாக்கம் கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர் தவெக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடனே அங்கிருந்த காவல் துறையினர் உடனடியாக அங்கு ஏற்பட்டுள்ள பதற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்த நபர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியது. பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியதை தொடர்ந்து, போலீஸ் வாகனத்தை மறித்து வாகனத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த நபர்களை காவல்துறையினர் வாகனத்தில் வைத்துள்ளதால் அங்குள்ள சில நபர்கள் வாகனத்தை வழிமறித்து தொடர்ந்து போராட்டம் செய்து வருகின்றனர். தற்பொழுது அந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் கைப்பேசிகளை பிடுங்கிய தவெக நிர்வாகிகள், செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து “நாங்கள் வெற்றி பெற்ற பிறகு உங்களை பார்த்துக் கொள்வோம்” என ஆவேசமாக பேசி சென்றனர். மேலும் நாங்கள் நினைத்தால் தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் நிறுத்தி விடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்குமுன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா குண்டடம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவரை சந்தித்த அப்பகுதி பொதுமக்களில் சிலர் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் சத்தியபாமாவின் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் “ரூ.50 கோடி பணம் வாங்குனீங்க. ஓட்டு போட்டவங்களுக்கு என்ன பதில்?” என்றும் பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து சத்தியபாமா தனது வாக்கு சேகரிப்பை தொடர்ந்து நடத்தாமல், பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதேபோல், குண்டடம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக சத்தியபாமாவின் பிரசாரத்தின்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் நடந்துள்ளன.
அதற்கு முன் மதுராந்தகத்தில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதத்திடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “பணத்திற்காக கட்சி மாறி சென்றுவிட்டு மீண்டும் வாக்கு கேட்க வருவது எந்த விதத்தில் நியாயம்” என்றும் “எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறு துரோகி துரோகி’’ என கோஷங்கள் எழுப்பினர். மேலும் கருப்புக்கொடி ஏந்தி பிரச்சாரத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போகும் இடங்களில் எல்லாம் மக்களின் அதிருப்தியையும் எதிர்ப்பை எதிர்கொண்டு வரும் தவெக வேட்பாளர்கள் மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து எதிர்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை எழுப்பியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்