பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (29.10.2026) ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தி.மு.க. கவுன்சிலர்கள் சரமாரியாக ஆணையாளர் மீது குற்றம் சாட்டினர். முக்கியமாக அரசு நிகழ்ச்சிகள் மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகள் நடைபெறும்போது தகவல் கொடுக்காமல் புறக்கணிப்பதாகக் கூறினர்.
புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் கல்வெட்டில் திறப்பாளர் பெயர் மேலே குறிப்பிடப்பட்டு மற்ற மக்கள் பிரதிநிதிகள் பெயர்கள் கீழே பொறிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அப்போது குறுக்கிட்டு பேசிய மேயர் பிரியா, "கடந்த சில மாதங்களாகவே அரசு, மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு முறையான அழைப்பு கொடுப்பதில்லை. கவுன்சிலர்கள் மட்டுமல்ல மேயர் எனக்கே அதுதான் நிலைமை. முதலமைச்சர் விஜய் ரிப்பன் மாளிகைக்கு வந்தபோது கூட மேயர் என்ற முறையில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவர் வருகிறார் என்றால் காலை முதல் இரவு வரை ரிப்பன் மாளிகையிலேயே இருக்க முடியுமா?
மாநகராட்சி மக்கள் பிரதிநிதிகளை அழைக்கக் கூடாது என்று அரசு தரப்பில் இருந்து ஏதாவது அறிவுறுத்தல் வந்துள்ளதா? என்று தெரியவில்லை. அரசுக்கு விருப்பமில்லை என்றால் மாநகராட்சியை கலைத்து விடுங்கள்." எனப் பேசினார்.
மேலும் துணைமேயர் மகேஷ் குமார், "முதலமைச்சர் மாநகராட்சிக்கு வருவது குறித்த தகவல் தெரிந்திருந்தால் நாங்கள் வந்திருப்போம். அவரை வர வேற்று இருப்போம். அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றார்.
இந்த சிக்கலுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் கூச்சல் எழுப்பினர்.
இதற்கு விளக்கம் அளித்த ஆணையாளர் சமீரன், "மக்கள் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும், தகவல் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிவித்திருக்கிறோம். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அழைக்க வேண்டும் யாரையும் ஒதுக்க வேண்டாம் என்று கூறியுள்ளோம்.
இது பற்றி மேலும் அறிவுறுத்தப்படும். இதற்காக கூட்டம் நடத்தி அதில் கண்டிப்பாக அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்துவோம்" என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.