மேகமலை: புலிகளா? மக்களா? யாருக்கு நிலம் சொந்தம்? தீர்வு என்ன? Tiger (Representative Image)
தமிழ்நாடு

மேகமலை: புலிகளா? மக்களா? யாருக்கு நிலம் சொந்தம்? தீர்வு என்ன?

மக்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து வருகின்றனர். அவை வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதால் வெளியேறக் கட்டாயப்படுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பல்வேறு மலைக் கிராமங்களும், பழங்குடியின மக்கள் குடியிருப்புகளும் உள்ளன. மேகமலை, மாஞ்சோலை மற்றும் முண்டந்துறை ஆகிய வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், தேவைப்பட்டால் துணை ராணுவப் படையை அனுப்பப்படும் என்றும் கறாராக உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்த உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் இடையே எதிர்ப்புகள் எழுந்தன. நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு சார்பில் அரசு 'சீராய்வு மனு' தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Meghamalaia

மேகமலையில் என்ன பிரச்சினை?

தேனி மாவட்ட நிர்வாகம், மேகமலையில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சுமார் 4,600 குடும்பங்கள், 12,500 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகக் கூறுகிறது. இதனுடன், வணிகக் கட்டடங்கள், ரிசார்ட்டுகள் மற்றும் இலவம் பஞ்சுத் தோட்டங்கள் ஆகியவையும் இடத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆக்கிரமிப்பாளர் பட்டியலில் 118 அரசு ஊழியர்களும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் உள்ளனர். 116 அரசு/பொது பயன்பாட்டுக் கட்டடங்களும் அடங்கும்.

மேகமலை - வருசநாடு வனப்பகுதி கடந்த 2012ஆம் ஆண்டு மேகமலை வன உயிரினச் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டியூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள், கடந்த 2021ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலைப் புலிகள் காப்பகத்தின் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

அப்போது முதல், இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வனத்துறையின் பல்வேறு கெடுபிடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

இன்றுவரை தமிழ்நாடு அரசு 1.8 விழுக்காடு நிலத்தை மட்டுமே மீட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Supreme Court

போராடும் மக்கள்; நீதிமன்றம் கறார்!

மேகமலையில் வசிக்கும் மக்கள் பழங்குடியினாராக இல்லாவிட்டாலும் பலர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக அங்கு வசித்து வருகின்றனர். அவை வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டதால் வெளியேறக் கட்டாயப்படுத்தப்படுவதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

கடந்த விசாரணையின்போது, ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதப்படும் மக்களை வெளியேற்ற தமிழக அரசு கால அவகாசம் கேட்டும், நீதிமன்றம் மறுத்துவிட்டது. அத்துடன், இலவம் பஞ்சுத் தோட்டங்களைக் கையகப்படுத்த வேண்டும் என்றும், ரிசார்ட்டுகளை மூடினால் மட்டும் போதாது, அவற்றை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதுடன், இரண்டு வாரங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சமர்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சமூக ஆர்வலர்கள் கடந்த 100 ஆண்டுகளில் மேகமலை பகுதியில் பொது மக்களை புலி தாக்கியதாகவோ அல்லது பொதுமக்கள் புலியை வேட்டையாடியதாகவோ எந்த பதிவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன் ​2006ல் இயற்றப்பட்ட வன உரிமைகள் சட்டம், வனத்தில் வசிக்கும் பட்டியல் பழங்குடியினர் மற்றும் டிசம்பர் 13, 2005 க்கு முன்பு வன நிலத்தை அனுபவித்துவந்த பிற பாரம்பரிய வனவாசிகளுக்கு வன உரிமைகளை அங்கீகரித்து வழங்குகிறது என்பதையும் எடுத்துறைக்கின்றனர்.

Meghamalai People Protest

அரசியல் தலைவர்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்ன?

நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், "மூன்று தலைமுறைகளாக அங்கு வசிக்கும் மக்களை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதாமல், 2006 வன உரிமைகள் சட்டத்தின்கீழ் அவர்களுக்கு பட்டா, வன உரிமைச் சட்டச் சான்றிதழ் உள்ளிட்ட உரிய சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 'வன உரிமைகள் சட்டம் - 2006'-ஐ நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாகவுள்ள சிக்கல்களைக் களைந்து, அதனை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். வனங்களில் வாழும் பழங்குடியினர் மற்றும் பல தலைமுறைகளாக அங்கு வசிக்கும் பழங்குடியினரல்லாதவர்களுக்கும் இச்சட்டத்தின்படி உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

மேகமலை மக்களுடன் இடதுசாரிக் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் விளைவாக வனவுரிமைச் சட்டம் 2006-இன் கீழ் மேகமலை, வருசநாடு உட்பட தேனி மாவட்டம் முழுவதும் உரிமையுள்ள மக்களுக்கு வனப்பட்டா மற்றும் நிலப்பட்டா வழங்க சிறப்பு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், பட்டா வழங்கும் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை யாரையும் வீடுகளிலிருந்தோ அல்லது நிலங்களிலிருந்தோ வெளியேற்ற மாட்டோம் என்றும் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

அண்ணாமலை

வீதி லீடர்ஸ் அமைப்பின் தலைவரான அண்ணாமலை, "பல ஆண்டுகளாக இந்தப் பகுதிகளில் வாழும் பொதுமக்கள், விவசாயிகள், வனத்தைச் சார்ந்து வாழும் மக்கள், பட்டா வைத்திருப்பவர்கள் மற்றும் வணிக ரீதியான ஆக்கிரமிப்பாளர்கள் என அனைவரையும் ஒரே பிரிவாகக் கருதி நடவடிக்கை எடுப்பது நியாயமான அணுகுமுறை அல்ல.

கடந்த 2026 மே மாதம், மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், தேவையான இடங்களில் பொதுமக்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து நடைபெற வேண்டும் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை ஒரே நாளில் பறிக்கும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக, மாற்றுக் குடியிருப்பு, மாற்று வாழ்வாதாரம் மற்றும் உரிய கால அவகாசத்துடன் மனிதாபிமான அடிப்படையில் இதனைத் தமிழக அரசு அணுக வேண்டும்.

தமிழக அரசு, வனத்துறை, வருவாய்த்துறை, நிலஅளவைத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய உயர்மட்டக் குழுவை அமைத்து, செயற்கைக்கோள்/DGPS அடிப்படையில் ஒவ்வொரு நிலத்தையும் மறுஆய்வு செய்து, உண்மையான வனநிலம், சட்டப்பூர்வமான பட்டா நிலம், நீண்டகாலக் குடியிருப்பு, உண்மையான ஆக்கிரமிப்பு மற்றும் விவசாயப் பகுதி ஆகியவற்றைத் தெளிவாக வரையறுக்க வேண்டும்" எனக் கூறியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்