2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன தமிழக வெற்றிக் கழகம், 34.9 சதவீத வாக்குகளைப் பெற்று 108 இடங்களை வென்று, பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.
இதுவரை தமிழ்நாடு அரசியலை நிர்ணயித்து வந்த இரண்டு பெரும் திராவிடக் கட்சிகளும் அவற்றின் கூட்டணிகளும் தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின.
ஏனென்றால், இவை எந்தத் தொகுதிகளைத் தங்களது கோட்டை எனக் கருதியனவோ, அந்த இடங்கள் கையைவிட்டுப் போயிருக்கின்றன. எந்த மக்களின் விரல்கள் தங்கள் கட்சியின் சின்னத்தைப் பார்த்தால் தானாகவே சென்று அழுத்திவிடும் என்று கருதினார்களோ, அந்த விரல்கள் விசில் அடித்திருக்கின்றன.
இந்த மறுபரிசீலனை நடவடிக்கையில் முதல் ஆளாக இறங்கியது திமுகதான். தேர்தல் தோல்வியின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டு வராத நிர்வாகிகளிடம் தொடர்ந்து நம்பிக்கையை விதைக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது திமுக.
அதன் ஒரு பகுதியாக, 38 பேர் கொண்ட குழுவை அமைத்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தது. பின்னர், தங்கம் தென்னரசு தலைமையில் ஒரு குழு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வடிவமைத்தது. அதன் அடிப்படையில், இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதில், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது, மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிப்பது போன்ற தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றன.
செயற்குழுவில், கட்சியின் தலைவர் ஸ்டாலின், நிர்வாகிகளின் செயல்பாடுகளும் தேர்தல் தோல்விக்கு முக்கியக் காரணம் என வெளிப்படையாகப் பேசினார்.
புதிய முகங்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கவும், உறுப்பினர் சேர்க்கைக்காக உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளைத் தேர்வு செய்யவும் முடிவு செய்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.
"Comeback கொடுப்பதில் நாம் Specialist! சிறப்பாகக் கொடுப்போம்!" எனவும் அவர் முழங்கியிருக்கிறார்.
திமுக மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது, ரத்தப் பந்தங்களுக்கே அனைத்து பதவிகளும் பிரித்துக் கொடுக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுதான்.
மாவட்ட அளவில் நடைபெற்று வரும் இந்தப் பிரச்சனைக்கு, புதிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கலாம். இத்துடன், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அதிகாரப் பரவலாக்கத்துக்கு வழிவகுக்கும்.
விஜய்யின் அரசியல் புயலில் சிக்கிப் பாதிக்கப்பட்ட எல்லா கட்சிகளுக்கும் இதைப் போன்ற ஒரு கம்பேக் பிளான் அவசியம். அப்படி, எந்தெந்த கட்சிகளில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் எனப் பார்ப்போம்.
விஜய்யின் அரசியல் பிரவேசமே நடக்கவில்லை என்றாலும், மறுசீரமைப்பு தேவை என்ற நிலையில்தான் அதிமுக இருக்கிறது. அதன் முக்கியத் தலைவர்களே ஒரே கட்சியாக இல்லை.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவை ஒதுக்கி வைத்தபோது அவருக்கு ஆதரவு அளித்த முக்கியப் புள்ளிகளே, இந்தத் தோல்விக்குப் பிறகு சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என்று நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, இரண்டு தரப்பாகப் பிரிந்து இருவேறு கூட்டணிகளைப் பற்றிக் கனவுகண்டு, பிளவுண்டு, இப்போது யார் எந்தப் பதவியில் இருக்கிறார் என்பதே தெரியாத நிலையில் கட்சி தொடருகிறது.
இத்துடன், வாரிசுகளுக்குப் பதவி வழங்கும் வழக்கமும் அதிகரித்திருப்பது பரிதாபத்துக்குரிய விஷயம்.
அதிமுக தலைவர்கள் ஒரே அணியாகத் திரள்வது அவசியம். எம்.ஜி.ஆருக்காக இரட்டை இலைக்கு வாக்களித்தவர்கள் இன்று இல்லை என்பதை மனதில் வைத்து, புதிய வாக்காளர்களைக் கவர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
NDA கூட்டணியில் நீடிப்பதுதான் சாதகமா, பாதகமா என்பதை ஆராய வேண்டும். அதே நேரத்தில், பாமக உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியைப் பாதுகாக்க வியூகங்களை வகுக்க வேண்டும்.
சசிகலா தரப்பு உள்ளே இருந்தாலும், தள்ளி இருந்தாலும் எடப்பாடிக்கு சோதனைதான். சசிகலா சேர்த்துக்கொள்ளப்பட்டால், அவரது தலைமையின் பவருக்குப் பங்கம் ஏற்படலாம். ஆனால், சசிகலா தனியாக நின்றதால் அதிமுக சில இடங்களை இழந்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும்.
கட்சியின் பலமா? தனது செல்வாக்கா? என்ற முக்கிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவைப் போல நிர்வாகிகள் பிளவு பாமகவிலும் இருந்தாலும், அதனால் பெரிய அளவிலான பாதிப்பு கட்சியில் இல்லை. ஏற்கெனவே பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணியின் பக்கம்தான் நின்றனர். முன்னாள் எம்எல்ஏ அருளுடன், ராமதாஸ் தலைமையில் பதவி பெற்ற நிர்வாகிகள் இடையே சிறிய பதற்றம் நிலவுகிறது.
இதனைக் கடந்து, சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணியும் கணேஷ்குமாரும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். அன்புமணி, மேகதாது பிரச்சினையைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ளார். பாமக, அதன் தொடக்க கால அரசியலை மீண்டும் கையில் எடுத்தால், வட மாவட்டங்களில் அசைக்க முடியாத சக்தியாகவும், பிற கட்சிகள் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளப் போட்டிபோடும் இயக்கமாகவும் மாறும்.
ஆனால், ஸ்ரீகாந்தி, அருள் கூட்டணியில் வன்னியர் வாக்குகளைக் குறிவைத்து புதிய கட்சி தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. மறுபக்கம், தவெக உடன் கூட்டணியை திருமாவளவன் உறுதி செய்துவிட்டதால், கூட்டணி மாறுவதும் இயலாததாக உள்ளது.
அன்புமணி, வன்னியர் வாக்குகளைக் கடந்து அனைத்து சமூகத்தினரின் மரியாதையையும் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுவே, தனித்த சக்தியாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவும். உள்ளாட்சித் தேர்தலில் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கிறாரா என்பதைப் பார்க்கலாம்.
தவெக உடனான கூட்டணியை திருமாவளவன் உறுதி செய்திருப்பது கட்சியினருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. மாநாட்டையும் சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றனர்.
ஆனால், மாநாட்டில் ஷா நவாஸ் போன்ற சில முக்கிய நிர்வாகிகள் பங்கேற்காதது சில கேள்விகளை எழுப்பியது. விசிகவில் விஜய் அல்லது திமுகவுக்கு தீவிர ஆதரவான நிர்வாகிகள் இருப்பதைக் களைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது அமைப்பு ரீதியிலான மாற்றம் இல்லை என்றாலும், திருமாவளவன் கையாள வேண்டிய முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
திருமாவளவனின் ஆழமான அரசியல் வகுப்புகளைப் போல, Gen Z இளைஞர்களை ஈர்க்கும் வகையிலான இயக்க ரீதியிலான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். அதுதான் விஜய்யின் புகழ் வெளிச்சத்தில் விசிக மறைந்துவிடாமல் பாதுகாக்கும். நெருப்புக்கு அருகில் சென்றால் சுட்டுவிடும்; அதன் வெளிச்சத்தில் பிரகாசிக்க, கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும். திருமாவளவன் மட்டுமல்ல, வன்னி அரசு உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் தள்ளி நிற்க வேண்டும்.
தவெக அதிகமான தலித் சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கினாலும், அவர்களுக்கும் அமைச்சர் வன்னி அரசுக்கும் இருக்கும் வேறுபாடுதான் தவெக வேறு, விசிக வேறு என்பதை உணர்த்துகிறது. இந்த வேறுபாடு அனைத்து நிலைகளிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
தமிழ்த் தேசிய மாநாடு, மாநில சுயாட்சி அறிக்கை ஆகியவற்றுடன், தலித் அரசியலைப் பேசுவதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆட்சியில் அதிகாரம் பெறும் கட்சியாக இருந்தாலும், களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓடிவந்து நிற்கும் கட்சியாகவே விசிகவை மக்கள் அறிவர்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்று, மாநிலக் கட்சி அந்தஸ்தையும் பெற்ற நாம் தமிழர் கட்சி, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாதியாகச் சரிந்து, வெறுமனே 4 சதவீத வாக்குகளாகச் சுருங்கியிருக்கிறது. இதற்கு விஜய்யின் வருகை மட்டுமே காரணம் எனக் கூறிவிட முடியாது. கட்சிக்குள் இருக்கும் சரிசெய்யப்படாத பிரச்சினைகளும் கணிசமான பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக, கட்சியில் அதிகாரம் கொண்ட தலைவர்கள் என சீமானைத் தவிர வேறு யாருமே இல்லை. எக்கச்சக்கமான பாசறைகள், பாசறைக்கு பல தலைவர்கள் இருந்தாலும், அதிகாரம் இல்லாததால் கட்டமைப்பு ரீதியாகச் சிதறுண்டு உள்ளது நாம் தமிழர் கட்சி.
இரண்டாம் கட்டத் தலைவர்களாக வளர்ந்து வந்த பலர் கட்சியில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படுவதை கடந்த காலங்களில் பார்த்திருக்கிறோம். கட்சிக்குள் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிப்பது, தேர்தல் வெற்றி என்ற இலக்கை இன்னும் எத்தனை தசாப்தங்கள் தள்ளிப்போடப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சீமானின் நெருக்கடிகளால் தலைவர்கள் கட்சி மாறுகின்றனரா? அல்லது தலைவர்கள் கட்சி மாறுவதால் சீமான் நெருக்கடி கொடுக்கிறாரா? என்ற கேள்விக்கு விடை கண்டுபிடிக்க வேண்டியது, நாம் தமிழர் கட்சியின் முன்னிருக்கும் முக்கியச் சவால்!
மீண்டும் திமுகவுக்கே வருவோம். கட்சி நிர்வாகிகளின் அதிகாரக் குவிப்புக்கு முடிவுகட்டும் நடவடிக்கைகள் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இது நடைமுறையில் எந்த அளவுக்குச் சாத்தியப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மறுபக்கம், வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கு திமுக காதை மூடிக்கொள்ளும் நிலை தொடர்ந்தால், மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் என்ன பயன் விளைந்துவிடப் போகிறது என்ற கேள்வியும் உள்ளது.
இன்றைய மக்களாட்சி அரசியல் என்பது, அதிகாரக் குவிப்புக்கும் அதிகாரப் பரவலாக்கத்துக்கும் இடையில் கயிற்றில் நடப்பதாக இருக்கிறது. இதில், அடுத்த 5 ஆண்டுகள் கீழே விழாமல் நடந்து, எந்தக் கட்சி 2029-ல் பிரகாசிக்கப் போகிறது என்பதைப் பார்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்