வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தி நகர், காமராஜர் காலனி காவலர் குடியிருப்பு பகுதியில் பலத்த மழையின் காரணமாக மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி உதவி எண்ணுக்கு அப்பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். மாநகராட்சி தரப்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தனது எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஆனந்த் இடம் புகார் தெரிவித்துள்ளார்.
அந்த பெண் புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக களத்திற்கு வந்த அமைச்சர் ஆனந்த், அந்த பகுதியில் தேங்கியிருந்த தண்ணீர் மற்றும் முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
சென்னை தி நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த், தி நகர் பேருந்து நிலையம் அருகே ஆய்வு மேற்கொண்டார். பின்னர் காமராஜர் காலனி காவலர் குடியிருப்பில் விழுந்த மரத்தை அமைச்சரே மரம் அறுக்கும் இயந்திரம் மூலமாக அறுத்து அப்புறப்படுத்தினார்.
பாதுகாப்பு பணிகளுக்கு இடையே அமைச்சர் ஆனந்த் நமது மாலைமுரசு தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், ஆய்வு நடவடிக்கை குறித்து பேசினார்.
அதில் செய்தியாளர், “இவ்வளவு நாள் அமைச்சர் களத்துக்கே வரல. ஆனா இந்த அமைச்சர் வந்துருக்காரு.. அப்படின்னு பொதுமக்கள் சொல்றாங்க” எப்படி சார் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “நான் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். நான் உடனடியாக வர வேண்டியது தான் என்னுடைய கடமை. அதற்காக தான் மாண்புமிகு முதலமைச்சர், அவர்கள் இந்த தொகுதியில் என்னை வேட்பாளராக நிக்கவச்சு ஜெயிக்க வச்சாங்க” என்று தெரிவித்தார். மேலும் மக்களுக்கு தேவையான உணவு ஏற்பாடு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, காலையிலையே 2000 பேருக்கு உணவு ஏற்பாடு செய்திருப்பதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசியதாவது, “மதிய உணவு 5000 பேருக்கு ஏற்பாடு செய்வதற்கு உண்டான வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்கள் வந்து எங்களை அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது. நானே வந்துடணும். அதுதான் எங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். அதுபடி நாங்க பார்த்துகொண்டிருக்கிறோம்.
கடந்த 3 மாதமாக நாங்க ஆய்வு கூட்டம் செய்திருந்தோம். கடந்த காலங்களில் நான்கு, ஐந்து நாள் மழை நீர் தேங்கி நிற்கும். இப்ப பாத்தீங்க அப்படின்னா உடனுக்குடன் அதை நாங்கள் சரி செய்து வருகிறோம். தொகுதி மக்களுக்கு எந்த தேவை இருந்தாலும் உடனே வர வேண்டியது என்னுடைய வேலை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் அங்குள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் அமைச்சரே ஈடுபட்டார்.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள், அமைச்சர் ஆனந்துக்கு நன்றி தெரிவித்தனர். இப்படி எந்த அமைச்சரையும் நாங்கள் களத்தில் பார்த்தது கிடையாது. புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். இதுதான் உண்மையான மாற்றம் என கூறி நன்றி தெரிவித்தார் புகார் அளித்த அப்பகுதி பெண்மணி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்