minister keerthana  
தமிழ்நாடு

பள்ளி ஆய்வால் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் கீர்த்தனா... அன்பில் மகேஷ் விமர்சனத்துக்கு ட்விட்டரில் பதிலடி!

ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, 'லாஸ்ட் பெஞ்ச்' என்று சுட்டிக்காட்டிப் பேசுபவர்கள் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள்...

Mahalakshmi Somasundaram

தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சில தினங்களுக்கு முன்பு, விருதுநகரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் திடீரென ஆய்வுக்குச் சென்றார். அப்போது வகுப்பறைக்குள் நுழைந்த அவர் மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். அதில் வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் அவரது தந்தையின் தொழில் என்ன என கேட்டதற்கு மாணவி பதில் கூற சற்று தயக்கம் அடைந்திருப்பார். இதனால் அருகில் இருந்த ஆசிரியையிடம் பேசிய அமைச்சர், மாணவர்களுக்கு ஆங்கிலத்தை வெறும் மனப்பாடமாக கற்றுக் கொடுக்காமல், அதன் அர்த்தத்தைப் புரியும் வகையில் எளிமையாக விளக்கி கற்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் லாஸ்ட் பெஞ்ச் மாணவர்கள் இதை கூட சொல்லமாட்டார்கள் மாணவர்கள் புரிந்து கற்றுக் கொள்வதே முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த ஆய்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இதையடுத்து, அமைச்சரின் அணுகுமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த விவகாரம் குறித்து தீவிரமான விவாதம் உருவானது.

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்த நிலையில், இது குறித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு, தற்போதைய அமைச்சர் கீர்த்தனாவின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், "நான் நினைப்பதுதான் சரி என்று பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணியோ, அமைச்சரின் பணியோ அல்ல. மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, 'லாஸ்ட் பெஞ்ச்' என்று சுட்டிக்காட்டிப் பேசுபவர்கள் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அந்த மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அன்பில் மகேஷின் இந்த கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் கீர்த்தனாவின் பள்ளி ஆய்வு நடவடிக்கையும், அதற்கு முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ள விமர்சனமும் தற்போது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 

அதே போல், எதிர் கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கத்தில் “அரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive. மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.

நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளை பயன்படுத்தாதீர்கள்” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனா

இந்நிலையில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்ட பதிவுகளுக்கு தற்போது அமைச்சர் கீர்த்தனா பதிலடி கொடுக்கும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.

நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை. கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்? ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.” என சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.