தமிழ்நாடு

தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: விளையாட்டுத் துறை பற்றி பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு.. கூர்ந்து கவனித்த உதயநிதி ஸ்டாலின்!

ஒட்டுமொத்தமாக ஊரக வளர்ச்சித் துறைக்கு 28,687 கோடி ரூபாய் பிரம்மாண்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது...

மாலை முரசு செய்தி குழு

தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளுக்குப் பிரம்மாண்டமான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தை உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு மையமாக மாற்றும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அவர் பட்டியலிட்டார். இதனை துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உரையை உன்னிப்பாகக் கவனித்தார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்காக இந்த பட்ஜெட்டில் 718 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கலைஞர் விளையாட்டுத் தொகுப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்ற 5,403 வீரர்களுக்கு 176 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் 'இது நம் ஆட்டம்' என்ற பெயரில் மாநில அளவிலான இளைஞர் விளையாட்டுத் திருவிழாவை நடத்த 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் முதல் உலகக்கோப்பை ஹாக்கி வரை பல சர்வதேசப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதற்காகத் தமிழக அரசு பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளதையும் அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஊரக வளர்ச்சித் துறையில் மிகப்பெரிய புரட்சியாக, 2030 ஆம் ஆண்டிற்குள் குடிசைகளே இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை மாற்றும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் அண்மைய அறிவிப்பின்படி கூடுதலாக ஒரு லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளன. கிராமப்புற சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு 8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 20,484 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக ஊரக வளர்ச்சித் துறைக்கு 28,687 கோடி ரூபாய் பிரம்மாண்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டிற்காக 'சிங்கார சென்னை 2.0' மற்றும் 'கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்' ஆகியவற்றின் கீழ் பல்லாயிரக்கணக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் பேரூர் மற்றும் நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் ஆறுகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க 374 கோடி ரூபாய் செலவில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறவுள்ளன. மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 28,227 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலனைப் பொறுத்தவரை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 3,397 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகளை வழங்க 71 அரசு ஐடிஐ-கள் (ITI) நவீன தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக, பட்டாசு தொழிற்சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதாந்திர பராமரிப்புத் தொகை வழங்கப்படுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 1,996 கோடி ரூபாய் இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.