

தமிழக சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார். கல்விச் செல்வத்தைப் போற்றிப் பாதுகாப்பதன் மூலம் அறிவுச் சமூகத்தைப் படைப்பதே இந்த அரசின் இலக்கு என்று குறிப்பிட்ட அவர், பாரதிதாசனின் வரிகளோடு தனது உரையைத் தொடங்கினார். தமிழகத்தின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பல்வேறு முத்தான திட்டங்களை இந்த அரசு முன்னெடுத்து வருவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பள்ளிக் கல்வித்துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகப் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் 673 கோடி ரூபாய் செலவில் 3771 வகுப்பறைகள், 107 ஆய்வகங்கள் மற்றும் மாணவ மாணவியருக்கான விடுதிகள் கட்டி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2009 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமானப் பணிகள் தற்போது பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் தலைமைத்துவப் பண்பை வளர்க்க 'மகிழ் முற்றம்' போன்ற புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பள்ளிக் கல்வித்துறைக்காக மட்டும் 48,534 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறையைப் பொறுத்தவரை, மாணவர்கள் பட்டப்படிப்புடன் நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளையும் பெறுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்லூரி மாணவர்கள் தங்களின் தொழில்நுட்பத் திறனை வளர்த்துக்கொள்ள 2172 கோடி ரூபாய் செலவில் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அண்மையில் தொடங்கி வைத்தார். இதுவரை 6,75,888 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமாக மாற்ற 1380 கோடி ரூபாய் மதிப்பிலான முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உயர்கல்வித் துறைக்காக 8,505 கோடி ரூபாய் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதியை உறுதி செய்யும் வகையில், அரசுப் பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிலும் 54,301 மாணவர்களின் கல்வி மற்றும் உணவுக் கட்டணங்களை அரசே ஏற்றுள்ளது. இதற்காக இதுவரை 1512 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே, மாணவர்களும் உயர்கல்வி தடையின்றிப் பெற 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையை இதுவரை 5,40,511 மாணவர்கள் பெற்று வருகின்றனர். தமிழகத்தின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் 47 சதவீதமாக உயர்ந்து தேசிய அளவில் முன்னணியில் உள்ளது.
முதலமைச்சரின் கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' திட்டம் மாணவர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 48 லட்சத்திற்கும் அதிகமான திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் வெற்றியாக, 2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த 59 நபர்களில் 52 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழக இளைஞர்கள் உலகளாவிய வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில் இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் சென்று சர்வதேசப் பயிற்சிகளில் பங்கேற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.