மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன், தனக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை என கடந்த மாதம் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் சட்டமன்றத்திலும் பேசப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவில், தனது கல்வி தொடர்வதற்கு தமிழக அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், தனக்கு ஏப்ரல் மாதம் முதல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் நிதி கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கு அமைச்சர் வன்னி அரசு இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், மாணவர் பாரதிதாசனின் விவகாரம் தொடர்பாக துறை ரீதியாக முழுமையான அறிக்கை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மாணவரின் படிப்பை தொடர்வதற்கு தமிழக அரசு முழுமையாக உதவும் என்றும் கூறினார். மாணவர் பாரதிதாசனுக்கான இந்த ஆண்டுக்கான கல்வித் தொகை ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவரது வாழ்வாதாரச் செலவுக்கான தொகையும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பிஎச்டி படிப்புக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் மெட்டீரியல்களுக்கான தொகையை மாணவர் கோரியுள்ளதாகவும், அந்தத் தொகையும் ஓரிரு நாட்களில் விரைவில் அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார். “அவர் படிக்க வேண்டும். அவருக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம். அவருடைய படிப்புக்குத் தேவையான அனைத்து வகையிலும் தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கும். அவர் என் தம்பி. அந்தத் தம்பி படிப்பதற்காகத்தான் நான் அமைச்சராக வந்திருக்கிறேன்” என அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
மேலும், மாணவர் பாரதிதாசன் தனது ஆராய்ச்சிப் படிப்பை முழுமையாக முடித்துவிட்டு தமிழகம் திரும்ப வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்