

தனக்கு வழங்க வேண்டிய படிப்புச் செலவுக்கான உதவித்தொகையை தமிழ்நாடு அரசு விடுவிக்கவில்லை என, மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன் கடந்த மாதம் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்திருந்தார்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் மலேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் படித்து வரும் அவரது புகாருக்கு மறுப்பு தெரிவித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, மாணவர் பாரதிதாசன் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என விளக்கம் அளித்திருந்தார். இந்த விளக்கத்துக்கு பதிலளித்த மாணவர் பாரதிதாசன், “வரலாறு உங்களை மன்னிக்காது” என அமைச்சர் வன்னியரசுவை குற்றம்சாட்டி மற்றொரு வீடியோவை வெளியிட்டார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அமைச்சர் வன்னியரசுவிடம் பல்வேறு கேள்விகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளார்.
மனவேதனையில் இந்தப் பதிவை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள மாணவர் பாரதிதாசன் கூறியதாவது: “நான் ஏப்ரல் மாதம் முதல், இந்த ஆண்டுக்கான அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் நிதி வரவில்லை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். இது சட்டமன்றம் வரை பேசப்பட்டது. ஆனால் அமைச்சர் வன்னியரசு அதை மறுத்திருந்தார்.
அதற்குப் பதிலாக, நான் தேவையான சான்றுகளை அனுப்பிவிட்டேன் என்பதைத் தேதியுடன் குறிப்பிட்டு, அந்த மின்னஞ்சலையும் பொதுவெளியில் வெளியிட்டேன். சில ஆவணங்கள் ரகசியமானவை; அவற்றை வெளியே பகிரக்கூடாது என்ற விழிப்புணர்வு எனக்கு இருக்கிறது. சட்டசபையில் அந்த விஷயம் விவாதிக்கப்பட்ட பிறகு, எனக்கு அன்று இரவே ஒரு மின்னஞ்சல் அனுப்பினீர்கள். அனைத்து விவரங்களையும் அனுப்பச் சொன்னீர்கள். நானும் அனுப்பினேன். ஆனால், இன்றுவரை நிதி வரவில்லை.
என்னை கல்லூரியிலிருந்து நீக்கப் போகிறார்கள். வரும் அக்டோபர் முதல் வாரத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) எனது ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார்கள். ஆனால், நிதி இல்லாததால் என்னால் அங்கு செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. கடந்த ஆறு மாதங்களாக எனது ஆய்வில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. எனது ஆராய்ச்சிப் பணிக்காகவே நான் அந்த நிதியைக் கேட்டேன். ஆனால், நீங்கள் என்னைக் குறிப்பிட்டு இலக்கு வைத்து (Target), உங்களிடம் உள்ள அனைத்து அதிகாரத்தையும் பயன்படுத்தி என்னை ஒடுக்க நினைக்கிறீர்கள்.
இருப்பினும், எனது முந்தைய மின்னஞ்சலிலும் குறிப்பிட்டிருந்தேன். எனது ஆய்வுக்குரிய ‘நெறிமுறைக் குறியீடு’ (Ethics Code) உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட ஆய்விற்கான அனைத்து விவரங்களையும் மின்னஞ்சலில் தெளிவுபடுத்தியிருந்தேன்.
ஆனால், நீங்கள் மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்கிறீர்கள். ‘இந்த ஆராய்ச்சிக்காகத்தான் இந்தப் பொருட்களை வாங்கினீர்களா என்று எங்களுக்குச் சந்தேகம் உள்ளது’ எனக் கூறி மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளீர்கள். என்னுடைய ‘எத்திக்ஸ் கோட்’, திட்டத்தின் விவரங்கள் மற்றும் தலைப்பு என அனைத்தையும் அனுப்பிவிட்டேன். அதிலேயே அனைத்து தகவல்களும் உள்ளன. இப்போது மீண்டும் இப்படி ஒரு கேள்வியை எழுப்பி, எனது நம்பகத்தன்மையையும் ஆராய்ச்சியையும் சீரழித்துவிட்டீர்கள். இங்குள்ள பேராசிரியர்கள் என் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் உடைத்துவிட்டீர்கள். வெரி குட்!
நான் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறேன். காலம் காலமாக நாங்கள் படிக்காமல் தான் இருந்தோம். எனது கிராமத்திலும் சரி, எனது குடும்பத்திலும் சரி, மருத்துவ ஆராய்ச்சிப் படிப்பிற்கு வந்துள்ள முதல் தலைமுறைப் பட்டதாரி நான் தான். ‘நீ ஏன் படிக்கிறாய், படிக்காதே’ என்று கூற நினைத்தால், தயவுசெய்து அதை சமூக நலத்துறை அமைச்சரே நேரடியாகச் சொல்லிவிடுங்கள். ‘உனக்கு ஏன் ஆராய்ச்சி? நீ அடிமையாகத்தானே இருந்தாய், அப்படியே இரு’ என்று கூறிவிடுங்கள்.
தயவுசெய்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். முடியாது என்றால் முடியாது என்று சொல்லிவிடுங்கள். நான் வேறு ஏதேனும் மாற்று வழி உள்ளதா என்று பார்த்து, இந்தியாவிலோ அல்லது வேறு எங்கேனுமோ எனது கல்வியைத் தொடர முயற்சி செய்கிறேன். இறுதியாக ஒரு விஷயம். வரலாற்றில் ரோஹித் வெமுலாவிற்கு என்ன நடந்ததோ, அன்று அந்த அமைச்சகங்கள் எவ்வாறு செயல்பட்டனவோ, இன்று இந்த அமைச்சகமும் அதேபோலத்தான் செயல்படுகிறது என்பதை நான் குற்றச்சாட்டாகவே வைக்கிறேன். இதுதான் உண்மை.
ஜெய் பீம்!” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மாணவர் பாரதிதாசனுக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியல்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது. ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும், அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்க முடியாது என்றால், அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்