திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிடுவதை தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க கோரி தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்( TAMIL FILM ACTIVE PRODUCERS ASSOCIATION) சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்த போது, ஏபோதைய சமூக வலைதள யுகத்தில், யார் வேண்டுமானாலும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் விமர்சனங்கள் முன் வைக்க முடியும். எதிர்மறை விமர்சனங்கள் வரும் திரைப்படங்களை மட்டுமே, தான் பார்த்து வருவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
இந்தியாவில், எதிர்மறை விமர்சனம் செய்வதை தடுத்தால், வெளிநாடுகளில் இருந்து விமர்சனங்கள் வரும். எதிர்மறை விமர்சனங்களை தடுப்பது குறித்து உத்தரவிட்டால் அதை எப்படி அமல்படுத்த முடியும் என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார். ஒட்டுமொத்த உலகமும் சமூக வலைதளங்களின் பிடியில் சிக்கி உள்ள இந்த யுகத்தில், தனி மனிதனோ, நாடோ விமர்னங்களில் இருந்து தப்பிக்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதி, மக்கள் திரைப்படங்களை பார்த்த பிறகு அதை அளவீடு செய்ய வேண்டுமே தவிர, மற்றவர்கள் கருத்துக்கு உடன்பட கூடாது என தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்த திரைப்படங்கள், பின்னர் வெற்றி பெற்ற வரலாறும் உள்ளது.திரை விமர்சனம் என்பது கருத்து சுதந்திரம். தயாரிப்பாளர்கள் நேர்மறை விமர்சனங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியாது எனவும் சாத்தியமில்லாத கோரிக்கையை மனுதாரர் கோரி இருக்கிறார் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் ஒடிடி தளங்கள், சினிமா தியேட்டர்களுக்கு புதிய சவாலாக உருவாகி உள்ளதை மறந்து விடக் கூடாது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.