தமிழக அரசியலில் கட்சி மாறுதலும், இடைத்தேர்தல் வெற்றியும் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 6ம் தேதி இரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகின. அதில் இரண்டு தொகுதியிலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும், எதிர்கட்சிகளை பகடி செய்யும் வகையிலும் தனது X தளத்தில் CTR நிர்மல் குமார் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில் மதுராந்தகத்தில் “முட்ட பரோட்டா… தாராபுரத்தில் வீச்சு பரோட்டா …” என மறைமுகமாக அதிமுக மற்றும் திமுகவை விமர்சித்துள்ளார். அதனையடுத்து முதல்வர் விஜய், அமைச்சர்கள் ஆனந்த், CTR நிர்மல் குமார், அருண்ராஜ் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர், சட்டமன்றத்தில் விஜய் செய்த சைகை போல் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, “ஒரு பேரே வரலாறு ….” என பதிவிட்டுள்ளார்.
கட்சி மாறிய இருவருக்கும் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட தவெக வாய்ப்பளித்தது. இந்த முடிவு அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியதுடன், தவெகவின் முன்னாள் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்காமல் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். திமுக இரண்டாவது இடத்தையும், அதிமுக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அரசியல் ரீதியாகக் கவனம் பெற்றுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட சத்யபாமா 66,841 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 57,370 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இருவருக்கும் இடையிலான வெற்றி வித்தியாசம் 9,471 வாக்குகள். அதிமுக சார்பில் போட்டியிட்ட பானுமதி 45,280 வாக்குகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். தற்போது அதே தொகுதியில் தவெக வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றிருப்பது, அத்தொகுதியில் அவரது அரசியல் செல்வாக்கு மற்றும் தவெகவின் தேர்தல் செயல்பாடு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியிலும் தவெக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 69,561 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் 50,649 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் 45,740 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்