நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஜெயராமனின் 27 வயதுடைய சுகன் (27) என்பவரது வீட்டில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மத்திய அரசின் கீழ் இயங்கும் திருச்சி மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் சுகனின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, உயர்ரக போதைப்பொருளான மெத்தம்பெட்டமைன் 5 கிலோ எடை கொண்ட பாக்கெட்டுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. மொத்தம் 135 கிலோ போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படும் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிந்தாமணி ஊராட்சியைச் சேர்ந்த நடராஜனின் மகனான 42 வயதுடைய பூபாலன் என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாகவும் வழக்கறிஞராகவும் இருந்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பயன்படுத்திய காரையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பூபாலனின் மனைவி பிரேமியா இலங்கையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தவெக மாவட்ட நிர்வாகம் அவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது. இதுதொடர்பாக தவெக மாவட்டச் செயலாளர் சுகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டதும், இந்த வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறது என்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும். தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.
ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது. "பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்.” என கூறி இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்