kolathur krishnamoorthy 
தமிழ்நாடு

நயினார் நாகேந்திரன் பாஜகவை அழிக்க பார்க்கிறார்…! கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பரபர…!

“எங்களுக்கு சுயமரியாதை முக்கியம். பொறுமையாக இருந்தோம் ஆனால்..

Saleth stephi graph

அதிமுக எப்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அப்போதிலிருந்து ஓபிஎஸ் தனது மவுசை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களை திரட்டி  "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.

அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன்  ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் பிதாமகராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அரசியல் ரீதியான பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டது பன்னீர் செல்வத்துக்கு பொருளாதார ரீதியான நஷ்டத்தை ஏற்படுத்தியது நாடறிந்த உண்மை.

இதனையடுத்து பாஜக மீதான தனது அதிருப்திகளை ஓபிஎஸ் அவ்வப்போது வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக அமித்ஷா சென்னை வந்தபோது தன்னை சந்திக்காதது வருத்தம் அளிப்பதாக வெளிப்படையாகவே பேசியிருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இதுவரை நீடிக்கிறோம் என்றெல்லாம் சொன்னார். ஆனாலும், ஓபிஎஸ்ஸை கூட்டணியில் ஏற்க எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாய் மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில்தான் சமீபத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி  தமிழகம் வந்தார். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓபிஎஸ் வெளிப்படையாகவே கடிதம் அனுப்பினார். ஆனால் அவரை சந்திக்க பிரதமர் அலுவலகம் அனுமதி அளிக்கவில்லை. தர்மயுத்த காலகட்டத்தில் ஓபிஎஸ் - ஐ எப்போது வேண்டுமானாலும் பார்க்க தயாராக இருந்த பிரதமர், விமான நிலையத்தில் கூட அவரை பார்க்க விருப்பம் காட்டவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்திக்கு உள்ளானது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பன்னீர்  செல்வத்தின் முக்கிய ஆதரவாளர்களின் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன் “பாஜக ஒரு மதவாதக் கட்சி,  தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைக்கும் எந்த கட்சியும் சீரழிந்துதான் போகும். வருகிற 2026 தேர்தல் திமுக -தவெக -வுக்கான போட்டியாக அமையப்போகிறது.. விஜய் ஓபிஎஸ் உடன் கரம் கோர்த்தால்  தமிழகத்தின் மிகப்பெரும் மாற்றம் நடக்கும் என்றெல்லாம் பேசியிருந்தார். பாஜக -வை தீவிரமாக ஆதரித்து வந்த ஓபிஎஸ் தரப்பு திடீரென பாஜக எதிர்ப்பை நிலைநாட்டியதன் காரணம், NDA கூட்டணியில் இருந்து அவர் விலக்கப்பட்டதால் தான் என பேசப்பட்டது.  அதனை உறுதி செய்யும் விதமாக, தற்போது, பாஜக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். மேலும் வெளியேறிய உடனேயே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது பேசுபொருளாக மாறி உள்ளது.

இந்நிலையில் “நயினார் நாகேந்திரன் பாஜகவை அழிக்க பார்க்கிறார். அண்ணாமலை இருந்தபோது மக்களிடம் இருந்த வரவேற்பு நயினார் நாகேந்திரனுக்கு இல்லை என்றும் சுயமரியாதை இழந்து பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை” என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக நமது மாலை முரசு செய்தியாளரிடம்  அவருடன் நடத்திய நேர்காணல் தற்போது காணலாம். “எங்களுக்கு சுயமரியாதை முக்கியம். பொறுமையாக இருந்தோம் ஆனால் எங்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. 

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று தந்தார் என்ற ஒற்றைக் காரணத்திற்காக பிரதமருக்கு விசுவாசமாக இருந்தோம். எடப்பாடிக்கு அளிக்கும் முக்கியத்துவம் எங்களுக்கு அளிக்கவில்லை.  திமுகவுடன் கள்ள உறவு என கூறுவது வேடிக்கையாக உள்ளது” என அவர் பேசியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.