தமிழக வெற்றி கழக கட்சியின் ஆதரவு கட்சிகளுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தவெக அமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசனைகள் நடந்துள்ளது.
ஒரு மணி நேரம் நடந்த இந்த தோழமை ஆலோசனை கூட்டத்தில், வருங்காலங்களில் தோழமை கட்சிகளின் கூட்டமைப்பை எப்படி வலுப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலை எப்படி எதிர்கொள்வது போன்ற பல்வேறு முக்கிய ஆலோசனை நடந்துள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற இடைத்தேர்தல் குறித்தும் கலந்துரையாடி உள்ளதாக தகவல்.
ஆலோசனை பிறகு கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், தவெக உடன் உருவாகியுள்ள இந்த கூட்டணிக்கு விரைவில் “நல்ல பெயர் வைக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும் புதிய கூட்டணி தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்ததாகவும், "தவெக கூட்டணி அமைந்துவிட்டது, இது கருத்து வேறுபாடு இல்லாத கூட்டணி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன் திமுக தலைமையில் விசிக, காங்கிரஸ், சிபிஎம், ஐயுஎம்எல், சிபிஐ மற்றும் மதிமுக போன்ற கட்சிகள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது விசிக, காங்கிரஸ், ஐயுஎம்எல் மற்றும் மதிமுக கட்சிகள் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் இணைத்து புதிய கூட்டணியை உறுதி செய்துள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இடது சாரி கட்சிகளான CPI மற்றும் CPM பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோழமை ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியளர்களை சந்தித்த காங்கிரஸ் MP ஜோதிமணி, "தவெக உடன் இணைந்து பயணிப்போம்" என்று தெரிவித்துள்ளார். "தவெக கூட்டணிக்கு விரைவில் பெயர் வைக்கப்படும் எனவும், கூட்டணிக்கு பெயரை தான் யோசித்து வைத்துள்ளதாகவும் முதல்வர் விஜய் கூட்டத்தில் தெரிவித்ததாக" துரை வைகோ குறிப்பிட்டுள்ளார். மேலும் பிரிவினை அரசியல் மற்றும் பண அரசியலுக்கு முதல்வர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.