தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் நாளை மறுநாள்(செப் 28) மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு செல்ல உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்து வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், முதலமைச்சரின் பயணம் மற்றும் நிகழ்ச்சிக்கான திட்டங்கள், ஜெம் வீரமணி வழக்கு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
‘வீரமணி வழக்கில் திமுக ஓவராக ரியாக்ட் செய்தாலே, அந்த விவகாரத்தில் ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம்’ என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். இந்த வழக்கை திமுக கையாண்ட விதம் தவறானது என்றும், முன்னாள் அமைச்சர் ரகுபதி வெளியான வீடியோ சரியாக இல்லை எனக் கூறி கடந்து சென்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், வீரமணியை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரை மிரட்டி பலர் பணம் பறித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் காவல்துறையைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்
“அப்போது முதல்வர் ஸ்டாலின் இதில் என்ன செய்தார்?” என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பினார். வீரமணி வழக்கில் கடந்த ஆட்சியில் FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான் என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வழக்கு பதிவு செய்தவர்கள் ஏன் வீரமணியை கைது செய்யவில்லை என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, “தவெக அரசு வீரமணி வழக்கை மறைக்க முற்பட்டதாக” தான் கூறியதை தவறாகப் புரிந்துகொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று விளக்கம் அளிப்பார் என அமைச்சர் கூறினார். திமுக ஆட்சியில் தகுதியற்றவர் என நிதித்துறையில் இருந்து நீக்கப்பட்டவர் பி.டி.ஆர். என அமைச்சர் நிர்மல்குமார் விமர்சித்தார். கட்சியில் அவருக்கு எந்த மதிப்பும் இல்லை என்றும், தொகுதிக்குள் கூட அவர் செல்லாததால் தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகவும் அவர் கூறினார்.
எடப்பாடி பழனிசாமியின் சுயநலம் காரணமாகவே அதிமுகவில் இருந்த விசுவாசிகள் அனைவரும் வெளியேறிவிட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். இதே நிலைமை திமுகவுக்கும் ஏற்படும் என்றும் அவர் கூறினார். இரண்டு கட்சிகளும் குடும்பச் சொத்தாக மாறிவிட்டதாக விமர்சித்த அவர், தேவையான நேரங்களில் பாஜகவை எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே வக்பு விவகாரம் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்ட விவகாரங்களில் பாஜகவை எதிர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“பாஜகவை கொள்கை எதிரி என நாங்கள் சொன்னதில் இதுவரை உறுதியாக உள்ளோம்” என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். திமுகவை ஒழிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைத்ததாகக் கூறிய அமைச்சர் நிர்மல்குமார், அந்தப் பணியை தவெக தலைவர் விஜய் செய்து காட்டுவார் என தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் மின்வெட்டு நிலை சீரமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். இன்னும் 3 மாதங்களில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மின்துறையில் எங்கெங்கு தவறுகள் உள்ளனவோ, அவை அனைத்தும் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
இதனிடையே, முதல்வர் விஜய் தொடங்கவுள்ள புதிய திட்டமான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இருக்கும் என்றும், முதலமைச்சரின் வருகை குறித்த அறிவிப்புகள் முழுமையாக திட்டமிட்ட பின்னர் முதலமைச்சர் அலுவலகத்தின் மூலம் அறிக்கை வெளியிடப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்