தமிழ்நாடு

ஏரி மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,... மாவட்ட ஆட்சியர் அலுவலம் முற்றுகை...!

Malaimurasu Seithigal TV

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்த கல்மேல் குப்பம் கிராம பகுதியில் அமைந்துள்ள ஏரி பகுதியில் இருந்து விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களின் பயன்பாட்டிற்காக ஏரி மணல் எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக்  கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதியை காட்டிலும் அதிகப்படியான ஆழம் மற்றும் அகலத்திற்கு ஏரி மணல் தூண்டி எடுக்கப்பட்டு வருவதாகவும், மற்றும்  விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்களின் பயன்பாட்டிற்கு எனத்  தெரிவித்து,  ஏரி மணலை பல்வேறு பணிகளுக்காக உள் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் சட்ட விரோதமாக அதிக அளவில் இரவு பகல் பாராமல் எடுக்கப்பட்டு வருவதாகவும்  கல்மேல் குப்பம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த பிரச்சனைகள் குறித்து கல் மேல் குப்பம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகளிடம் புகார் மனுக்களை வழங்கியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்  கூறப்படுகிறது.  மேலும் இதனால் ஆத்திரமடைந்த கல் மேல் குப்பம் கிராமம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தின் போது கல்மேல் குப்பம் கிராம பகுதியில் உள்ள ஏரியிலிருந்து மணல் எடுக்கப்படும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கிராம மக்களை அச்சுறுத்தும் விதமாக செயல்பட்டு வரும் நபர்களின் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தி அக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து,  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு அவர்களது கோரிக்கைகளை புகார் மனுவாக பெற்றுக்கொண்டு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பின்னர்,  போராட்டமானது தற்காலிகமாகக்  கைவிடப்பட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.