தமிழ்நாடு

"விஜய் - த்ரிஷா" பற்றி வார்த்தையை விட்ட நயினார் நாகேந்திரன் - வலுக்கும் எதிர்ப்பு!

பொதுவெளியில் எதைப் பேச வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும்...

மாலை முரசு செய்தி குழு

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நயினார் நாகேந்திரன் அண்மையில் பேசிய கருத்துக்கள் நாகரிகத்தின் எல்லையைத் தாண்டிவிட்டதாகப் பலதரப்பிலிருந்தும் கண்டனக் குரல்கள் எழுகின்றன. குறிப்பாக நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரைத் தனிப்பட்ட முறையில் தொடர்புபடுத்தி அவர் பேசிய பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நயினார் பேசுகையில், விஜய் முதலில் தனது குடும்பத்துடன் நல்ல உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவர் இன்னும் அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றும், விஜய் தனது வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும், குறிப்பாக த்ரிஷாவின் வீட்டிலிருந்து முதலில் அவர் வெளியே வந்தால்தான் உருப்படியாக ஏதாவது நடக்கும் என்றும் பேசியிருப்பது மிகுந்த அவதூறான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அவரது இந்த பேச்சுக்கு செங்கோட்டையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார். மேலும் பாஜக ஒரு கட்சியே இல்லை என்றும், அவர்களைப் பற்றிப் பேசுவதே வீண் என்றும் அவர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அரசியல் ரீதியாகக் கருத்துக்களைச் சொல்லத் துணிவில்லாதவர்கள் இது போன்ற தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுவது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதேபோல் தவெக தரப்பிலிருந்து நிர்மல் குமாரும் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். நயினார் நாகேந்திரன் ஒரு கேவலமான நபர் என்றும், அவர் ஒருபோதும் உண்மையான அரசியல்வாதியாக மாற முடியாது என்றும் கூறியுள்ளார்.

நிர்மல் குமார் மேலும் பேசுகையில், நயினார் நாகேந்திரன் எப்போதும் தன்னை ஒரு தொழிலதிபராகவே காட்டிக்கொள்கிறாரே தவிர, மக்களுடன் தொடர்பு கொண்ட ஒரு தலைவராக அவர் இருந்ததே இல்லை என்று குற்றம் சாட்டினார். இத்தனை காலமும் அரசியலில் இருந்தும் ஒரு நாகரிகமான அரசியலை அவரால் முன்னெடுக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. கடந்த காலங்களில் நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெற்றவர்கள், இப்போதும் அதே போன்ற படுதோல்வியைத் தழுவப் போவது உறுதி என்பதால் வரும் விரக்தியில் இது போன்ற தரம் தாழ்ந்த பேச்சுகளை அவர் பேசி வருவதாக தெரிவித்தார். ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் எதைப் பேச வேண்டும் என்கிற குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பெண் அரசியல் தலைவர்களும் நயினார் நாகேந்திரனின் இந்தப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன் இது குறித்துக் கூறுகையில், அரசியல் கருத்து மோதல்களைத் தாண்டி பொதுவெளியில் இயங்கும் பெண்களைப் பற்றி அவதூராகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். அதே சமயம் பாஜகவில் இருக்கும் குஷ்பூ மற்றும் வானதி சீனிவாசன் போன்ற பெண் தலைவர்கள் நயினார் நாகேந்திரனின் இந்த அநாகரிகப் பேச்சைத் தட்டிக் கேட்காமல் மௌனம் காப்பது ஏன் என்கிற கேள்வியும் வலுவாக எழுந்துள்ளது.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்துத் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். பொதுவெளியில் யாருமே இது போன்ற தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நயினார் நாகேந்திரன் பொதுவாக அப்படிப் பேசக்கூடியவர் அல்ல என்று குறிப்பிட்ட அவர், இருப்பினும் இது போன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல என்பதை சுட்டிக்காட்டினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.