மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து மக்களுக்கு அளிக்கபட்ட கோவில் நிலங்கள் குறித்து பேசினார். அதில் அவர், அதிமுக ஆட்சி காலத்தில் 318 என்ற அரசாணை எண் வெளியிடப்பட்டது. அதன் மூலமாக கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களில் ஏழைகளாக இருப்பவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்குவது என்ற ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 600 ஏக்கரில் குடிமனை பட்டா வழங்க முடிந்திருக்கும் ஆனால், மதவாத அமைப்புகளை சார்ந்தவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று கோவில் நிலங்களை அரசாங்கம் வாரி வழங்குகிறது, இலவசமாக கொடுக்கிறது என்று வழக்கினை தொடுத்து அதற்கு ஒரு தடையானையும் பெற்றனர். கடந்த 8 ஆண்டுகாலமாக அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கக்கினை விரைவாக முடிப்பதற்கு திமுக ஆட்சிக்காலத்தில் எந்த வித முயற்சியும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டு பேசினார்.
சட்டமன்றத்தில் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பேசியபோது, அப்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, "இந்த வழக்கினை விரைவில் கொண்டுவருவோம்" என்று வாக்குறுதி வழங்கியதாக குறிப்பிட்டார். ஆனால் அது நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் அரசாணை எண் 85, 80 என்ற வாடகையை குறைக்கும் ஒரு நல்ல முன்னெடுப்பை செய்ததாக கூறினார். ஆனால், அவை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் அதுவும் நடைமுறைக்கு வராமல் போனதாக குறிப்பிட்டார். சில நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது 'உரிய பலனை அளிக்கவில்லை' என்று அவர் கூறினார். புதிய ஆட்சி இந்த பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே கடந்த 4-ம் தேதி தவெக அமைச்சர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்ததாகவும் வருகின்ற 9-ம் தேதி அதாவது நாளை தவெக அலுவலகத்தில், ஆட்சியில் பங்கேற்றிருக்கும் கட்சிகள், ஆதரவு தரக்கூடிய கட்சிகளை அழைத்து ஒரு கூட்டம் நடத்தப்போவதாகவும், அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கவேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.
அந்த கூட்டத்தின் நோக்கமாக அவர்கள் கூறியது, ஒரு புதிய கூட்டணியை உருவாக்குவது, அந்த கூட்டணிக்கு குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது, அடுத்தடுத்து நடக்கக்கூடிய தேர்தல்களில் கூட்டணி சார்பில் எதிர்கொள்வது என்கிற நோக்கத்தோடு தவெக இந்த கூட்டத்தினை கூட்டப்போவதாக பெ. சண்முகம் தெரிவித்தார். கட்சி தலைவர்களோடு கலந்தாலோசித்து விட்டு கூறுவதாக சிபிஎம் கூறிய நிலையில் "நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது" என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், இந்த ஆட்சி அமைய வெளியில் இருந்து கொடுக்கப்பட்ட ஆதரவு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னாளில் இந்த அரசிடம் என்ன என்ன செயல்திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்பதை எழுத்து பூர்வமாக கட்சியின் ஆலோசனையை தெரிவிக்கப்போவதாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
பின்னர்,' சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சட்டமன்றம் மக்கள் பிரச்சனையை பேசும் இடமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மாறாக, அது 'கத்தல் மன்றமாக' இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். சட்டமன்றம் 'சத்த மன்றமாகவும், சண்டை மன்ற'மாகவும் மாறிக்கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இருவருக்குமே பொறுப்பிருப்பதாக அவர் கூறினார். மேலும், தற்போது மக்கள் அனைவரும் சட்டமன்றத்தை பார்ப்பதால், அதனை முறையாக நடத்த வேடனும் என்று கூறினார். மேலும் "நடக்கும் சட்டமன்றம் மக்களின் வரிப்பணத்தில் நடக்கிறது அவர்களின் சொந்த பணத்தில் நடக்கவில்லை, அதனால் மக்கள் பிரச்சனை குறித்தும் பேசவேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார். "வீணான விவாதங்களால், நேரங்கள் விரயமாவதை" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தவிர்த்து ஊழலை தமிழ்நாட்டில் எதிர்த்த கட்சி ஒன்றினை கூறுங்கள்? என்று செய்தியாளர்களை நோக்கி கேள்வினை எழுப்பினார். மேலும், தமிழ்நாட்டில் மட்டுமல்ல இயந்தியாவிலேயே கூட கூறுங்கள் என்று கேட்டார். தாங்களும் 3 மாநிலங்களில் ஆளும்கட்சியாக இருந்ததை குறிப்பிட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். மேலும், நேற்று நடந்தது காவல்துறை, தீயணைப்பு துறைக்கான மானியங்களுக்கு பதில் கூறுவது. ஆனால் விவாதத்தின் போது எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்காவது முதல்வர் பதிலளித்தாரா? என்று பெ. சண்முகம் கேள்வி எழுப்பினார். சம்மந்தமில்லாமல் அவர் பேசுவதாகவும், இதுபோன்றவற்றை பேசுவதற்கு நிறைய இடங்கள் இருப்பதாகவும் கூறியதோடு, சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு முறையாக முதலமைச்சர் பதிலளிக்கவில்லை என்று காட்டமாக தனது கருத்தினை முன்வைத்தார்.
மேலும், "இப்படி எப்போதுமே நடந்தது இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டார். "மானியக்கோரிக்கைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்ப பதிலுரைகள் இருக்கவேண்டுமே தவிர, நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசுவோம் என்கிற முறையில் சட்டமன்றம் நடைபெறக்கூடாது" என்று கூறினார். மேலும், "தவெக-விற்கு வெளியில் இருந்து தரப்படும் ஆதரவு என்பது 5 வருடங்கள் தொடருமா? அல்லது உங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் வருமா?" என்ற செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அது அவர்களின் நிலைப்பாட்டினை பொறுத்தது" என்று பெ. சண்முகம் பதிலளித்தார். மேலும், நேற்றைய தினம் சட்டமன்றத்தில் 'மிசா' குறித்தும் 'சர்க்காரியா கமிஷன்' குறித்தும் வைக்கப்பட்ட குற்றசாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு "தவெக அமைச்சர்களுக்கு பணிவாக கேட்டுக்கொள்வது என்னவென்றால் முதலில் படியுங்கள். 'இஸ்மாயில் கமிஷன்' அறிக்கை என்று ஒன்றி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் சென்னையில் 'மிசா' காலத்தில் நடைபெற்ற கொடுமைகள், வன்முறைகள், கைதின்போது இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து அந்த அறிக்கையில் விரிவாக இருப்பதாக கூறினார். பின்னர், "மிசாவில் கைதானவர்கள் எல்லோரும் சமூகவிரோதிகள் என்று அமைச்சர் நிர்மல் குமார் பேசியிருப்பது, சிறுபிள்ளைத்தனமானது, முழுக்க அறியாமையில் இருந்து வெளிவரக்கூடிய கருத்து" என்று காட்டமாக கூறினார்.
மேலும், இந்தியா முழுவதும் பல மார்க்சிஸ்ட்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததையும், கடுமையான சித்திரவதைகள் அனுபவித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், "வரலாறு தெரியாமல் திமுகவின் மீது உள்ள கோபத்தில் சகட்டுமேனிக்கு சேற்றைவாரி வீசுவது என்கிற முறையில் அமைச்சர்கள் பேசுவது வன்மையான கண்டனத்திற்கு உரியது" என்று பேசினார். 'மிசா' குறித்து அகில இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும் பல ஆவணங்கள் இருப்பதாகவும் 'அதனை படியுங்கள்' என்றும் அவர் வலியுறுத்தினார். 'சர்க்காரியா கமிஷன்' குறித்து அனைவருக்கும் தெரியும் என்றும் அதனால் யாரும் முறையாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கோ, கைது நடவடிக்கையோ நடக்கவில்லை என்பதை தெரிவித்தார். "இவை அனைத்தும் நேரத்தை விரயமாக்கும் தந்திரம்" என்று சட்டமன்றம் குறித்து பெ. சண்முகம் கூறினார். மேலும், "முதல்வர் தனது மேசையில் உள்ள 3 கோப்புகள் குறித்து ஏன் பேசவில்லை?" என்றும் "சம்மந்தம் இல்லாமல் 50 ஆண்டுகள் முன்னாள் நடந்த 'சர்க்காரியா கமிஷன்' பற்றி ஏன் பேச வேண்டும்?" என்ற கேள்விகளை எழுப்பினார். மேலும், "இது திசை திரும்புகிற தந்திரம்" என்று சுட்டிக்காட்டினார்.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்று வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்