இந்தியாவையே உலுக்கிய தீவிரவாத தாக்குதல்.. தமிழ்நாட்டில் இருந்து முதல் ஆளாக குரல் கொடுத்த முஸ்லீம் அமைப்புகள்..!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காமைக்கு அருகில் அமைந்திருக்கும் பைசரன் பள்ளத்தாக்கு ஒரு முக்கியமான சுற்றுலாத்தளம் ஆகும். இந்த ரம்மியமான பள்ளத்தாக்கில் நேற்று மலையிலிருந்து மரண ஓலம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
சின்ன ஸ்விச்சர்லாந்து என்றும் இந்த பைசரன் பள்ளத்தாக்கிற்கு நடந்தோ குதிரையிலோ மட்டுமே செல்ல இயலும். மிக முக்கியமான இப்பகுதியில் பயணிகளுக்கென கேளிக்கை விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் அங்குள்ள ரிசார்ட்டில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் நேற்று புல்வெளியில் குதிரை சவாரி செய்து கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராணுவ சீருடையில் அங்கு வந்த பயங்கரவாதிகள் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை சரமாரியாக சுட்டனர், இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் ஐதராபாத்தை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி மணீஷ் மற்றும் இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் பலியான வினய் -க்கு திருமணமாகி 6 நாட்களே ஆகின்றது. மனைவியோடு தேன் நிலவுக்கு வந்தபோது அவருக்கு இந்த சோகம் நடந்துள்ளது. இரண்டு வெளிநாட்டு பயணிகள் உயிரிழந்ததோடு தமிழகத்தை சேர்ந்த 2 பேரும் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் அரசு முறை பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளார். மேலும் தாக்குதல் குறித்து உடனடியாக அதிகாரிகளோடு ஆலோசனைக்குக்கூட்டமும் நடத்தினார் என்றும் கூறப்படுகிறது.
தாக்குதலின் விளைவாக நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காஷ்மீரில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது. பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்துள்ளனர். மீண்டும் ஜம்மு- காஷ்மீரில் பொது இயல்பு நிலை திரும்பும் என்று தெரியவில்லை.
தமிழகத்தில் என்ன நிலவரம்!
தமிழ் நாட்டில் உள்ள எல்லா மசூதிகளுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் குறித்து இங்குள்ள பல முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதாகவும், தங்களின் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளன.
மனித நேய மக்கள் கட்சி
இந்த காட்டுமிராண்டி தாக்குதலை இந்திய மக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டிக்கப்பட வேண்டும். காஷ்மீர் பகுதியில் அமைதியை நிலை நிறுத்த ஆக்கப்பூர்வமான முன் முயற்சிகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன், என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்திருக்கிறார்
தமிழ் மாநில முஸ்லிம் லீக்
காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியது 26 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த தீவிரவாத செயலுக்கு துணை போகின்றவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்தியா என்பது யாருக்கும் அடிபணியாது யாரும் இந்தியாவை மிரட்ட முடியாது!! மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்கள் தக்க நேரத்தில் சரியான நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள் அவர்களுடைய துரித நடவடிக்கையால் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்” இந்த தாக்குதலுக்கு எதிராக தமிழ் மாநில முசுலீம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளூர் ஷா நவாஸ் கண்டனம்
காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கொடூரமானது; கண்டிக்கத்தக்கது. அப்பாவி மக்களை கொன்றவர்கள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும். பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
மன்மோகன் சிங் வலிமையற்றவர் என்றும், அதனால் தான் அவர் ஆட்சியில் பயங்கரவாத தாக்குதல்கள் நடக்கின்றன என்றும், வலிமையான மோடி வந்தால் தாக்குதல்களே நடக்காது என்றும் சொன்னது பாஜக. காஷ்மீர் 370 பிரிவை நீக்குவதே தீர்வு என்று சொல்லி நீக்கியது பாஜக. ஆனால், தாக்குதல்கள் தொடர்கின்றன. அவலம்! என விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக பல முஸ்லீம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்