பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள 1.4 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் தனிநபர்களின் பெயருக்கு மாற்றி பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், சிபிசிஐடி போலீசார் மூவரை கைது செய்துள்ளனர். கோயில் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் திட்டமிட்டு இந்த மோசடி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த(ஜூலை 6) ஆம் தேதி, பழனி மடத்திற்குச் சொந்தமான இந்த நிலம், அதன் உண்மையான உரிமை மறைக்கப்பட்டு வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகியோரின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் வெறும் ரூ.2 கோடி மதிப்பில் கணக்கு கிரயம் செய்யப்பட்டதாகவும், இந்த பரிவர்த்தனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, கோயில் நிலம் என்ற விவரம் மறைக்கப்பட்டு, பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தனிநபர்களுக்கு சட்டவிரோதமாக பதிவு செய்து மோசடி நடைபெற்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், கடமையில் அலட்சியம் மற்றும் முறைகேட்டில் தொடர்பு இருப்பதாகக் கூறி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
கடந்த 14 நாட்களாக ஆவணங்கள், சொத்து பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் தொடர்புடைய நபர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகாவைச் சேர்ந்த காளிமுத்துவின் மகன் வெள்ளத்துரை கோயில் நிலத்தை வாங்கியவர் என்பதும், பழனி ஏ.சி.சி. சாலையைச் சேர்ந்த அமீது என்பவரின் மகன் அன்வர்தீன் இந்த பரிவர்த்தனைக்கு முக்கிய உடந்தையாக செயல்பட்டதும், விழுப்புரம் மாவட்டம் சாலமேடு காமராஜ் நகரைச் சேர்ந்த தண்டபாணியின் மகன் முருகதாஸ் நிலத்தை விற்பனை செய்ததும் விசாரணையில் உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, முருகதாஸ், வெள்ளத்துரை மற்றும் அன்வர்தீன் ஆகிய மூவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றச் சதி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசுப் பதிவுகளை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த நில மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, இதுபோன்ற முறையில் கோயில் சொத்துகள் வேறு இடங்களிலும் அபகரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் சிபிசிஐடி அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.