Thangam Thennarasu 
தமிழ்நாடு

“110 விதியில் அறிவிப்பு.. விவாதிக்க மறுப்பு” - பரந்தூர் விமான நிலையம் ரத்து.. கேள்வி எழுப்பி திமுக வெளிநடப்பு!

இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதுவும் இல்லை எனக் கூறி சபாநாயகர் அனுமதி மறுத்தார்...

Mahalakshmi Somasundaram

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் இன்று அறிவித்த நிலையில், இது தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி திமுக எம்.எல்.ஏக்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, பரந்தூர் விமான நிலையம் சென்னையின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமானது என்றும், அரசின் முடிவுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்த திமுக

பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து விவாதிக்க அனுமதி கோரி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் அளிக்கப்பட்டதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்வதாகக் கூறி சபாநாயகர் காலதாமதம் செய்தார். முதலில் இன்று, பின்னர் நாளை எனக் கூறப்பட்ட நிலையில், இறுதியாக திங்கட்கிழமை சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமாக எடுத்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சட்டப்பேரவை தொடங்கியவுடன் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எதுவும் இல்லை எனக் கூறி சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்” என்றார்.

பரந்தூர் விமான நிலையம் அவசியம்

சென்னையின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம் என்றும், பரந்தூர் விமான நிலையத் திட்டம் அதற்கு முக்கியமானது என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னையைச் சுற்றிய பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பின்னரே பரந்தூர் விமான நிலையத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். மேலும், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதால், பரந்தூர் விமான நிலையம் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையத்தை நம்பியே பல மின்னணு நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்று இடம் எப்போது தேர்வு?

“புதிய இடத்தில் விமான நிலையம் அமைக்கப்படும் என அரசு கூறுகிறது. அந்த மாற்று இடம் எப்போது ஆய்வு செய்யப்படும்? அங்கு விமான நிலையம் அமைந்தால் எத்தனை மக்கள் வெளியேற்றப்படுவார்கள்? அவர்களின் வாழ்வாதாரம் என்னவாகும்?” என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார்.

மேலும், பரந்தூர் விமான நிலையத்தை கருத்தில் கொண்டே அப்பகுதிக்கான மெட்ரோ ரயில் வழித்தடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சென்னை–பெங்களூரு விரைவுச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் விமான நிலையத்தை கணக்கில் கொண்டே செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களுக்காக கைவிடக் கூடாது

நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக கைவிடுவது சரியல்ல என தங்கம் தென்னரசு விமர்சித்தார். “விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் தெரிவித்தேன், தேர்தல் வாக்குறுதியில் கூறினேன் என்பதற்காக மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை நிறுத்துவது ஏற்புடையதல்ல. பரந்தூர் விமான நிலையம் கைவிடப்பட்டால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதித்திருக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் விஜய் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி வெளிநடப்பு செய்த சம்பவம் சட்டப்பேரவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்