“70 வயதுக்கு மேல் பதவி இல்லை?” - திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு.. 13 மாவட்டச் செயலர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

ஒன்றியக் கழகங்கள் சுமார் 30 ஆயிரம் வாக்காளர்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளன...
DMK Executive Committee
DMK Executive Committee
Published on
Updated on
2 min read

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் திமுக செயற்குழு கூட்டத்தில், கட்சியின் அமைப்பை முழுமையாக மறுசீரமைக்கும் வகையில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற அடிப்படையில், திமுகவின் மாவட்டங்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்சிப் பதவிகளில் புதிய நிர்வாகிகளை கொண்டு வரும் வகையில், பல்வேறு பொறுப்புகளுக்கான அதிகபட்ச வயது வரம்பும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளைக் கழகச் செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரை ஒருவர் ஒரே பொறுப்பில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 ஆகவும், மாநகரம், நகரம் மற்றும் பேரூர் வட்டக் கழகச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பேரூர் கழகம், பகுதி கழகம், நகரக் கழகம் மற்றும் ஒன்றியக் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் மாவட்டச் செயலாளர் பதவியிலும் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே இருக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை இருந்து வந்த மாநகரச் செயலாளர் என்ற பதவி இனி இருக்காது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் அமைப்புகள் வாக்காளர் எண்ணிக்கையின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியில் சுமார் 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வட்டக் கழகமும், பிற மாநகராட்சிகளில் சுமார் 5 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வட்டக் கழகமும் அமைக்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் பகுதிக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களையும், பிற மாநகராட்சிகளில் 30 ஆயிரம் வாக்காளர்களையும் கொண்டதாக அமைக்கப்பட உள்ளது. அதேபோல், நகரக் கழகங்கள் சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களையும், ஒன்றியக் கழகங்கள் சுமார் 30 ஆயிரம் வாக்காளர்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளன.

மாவட்டங்களைப் பொறுத்தவரை, வருவாய் மாவட்டங்களின் அடிப்படையில் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம் என்ற வகையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. ஒரு வருவாய் மாவட்டத்தில் ஒரு தொகுதி மட்டும் எஞ்சியிருந்தால், அதே மாவட்டத்தில் உள்ள பொருத்தமான கழக மாவட்டத்துடன் அந்த தொகுதி இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 110 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, 15 நாட்களுக்குள் ஒன்றியம், நகரம், பகுதி மற்றும் வட்டக் கழகங்களின் பிரிப்புப் பணிகளை முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்னர் தலைமைக்கழக பிரதிநிதி முன்னிலையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு, மறுசீரமைக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஒப்புதல் பெறப்படும். வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்சி அமைப்புகளை உருவாக்குவதும், பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பதும் திமுகவின் அமைப்பு ரீதியான முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், தற்போது 70 வயதைக் கடந்துள்ள சில மூத்த மாவட்டச் செயலாளர்களின் பதவிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய மாவட்டச் செயலாளர்களில் 13 பேர் 70 வயதைக் கடந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், செஞ்சி மஸ்தான், முத்துசாமி, எஸ்.ஆர். சிவலிங்கம், தளபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் எதிர்கால பதவி குறித்து கட்சிக்குள் கவனம் ஏற்பட்டுள்ளது. திமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய தீர்மானங்கள், கட்சியின் அடுத்தகட்ட அமைப்பு மற்றும் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com