Periyar Arivulagam book controversy 
தமிழ்நாடு

"நிரந்தரமாக நஞ்சூட்டும் செயலுக்கு ஒப்பானது.." - பெருமாள் முருகனால் அம்பலமான ஊழல்! பெரியார் அறிவுலக சர்ச்சையில் சு. வெ காட்டம்!

பெருமாள் முருகன் கண்டறிந்து வெளிக்கொண்டு வந்திருக்காவிட்டால், கீழடியின் வரலாறு எனும் நூல் நந்தி சிலை கண்டறியப்பட்ட செய்தியை சொல்லக் காத்துக் கொண்டே இருக்கும்.

Vinvizhi Leninton

பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதில் நிகழ்ந்துள்ள ஊழல் குறித்து MP சு. வெங்கடேசன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் கோவையில் பெரியார் அறிவுலக நூலகத்தினை திறந்து வைத்தார். மேலும், அதனை சுற்றி பல சர்ச்சை செய்திகள் அன்றிலிருந்து இன்று வரை உலா வந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, எழுத்தாளர் பெருமாள் முருகன் அந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் மற்றும் பதிப்பகங்கள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதாவது, நான்காம் தளத்தில் இருந்த தமிழ் நூல்களைச் சான்றாக குறிப்பிட்டு, ’அகல்விளக்கு பதிப்பகம்’ வெளியிட்ட கிட்டத்தட்ட 1,800 நூல்களை வெளியிட்டுள்ள இந்த பதிப்பகம் குறித்து எழுத்துலகில் பல காலம் இருந்து வரும் தனக்கு தெரியவில்லை என்றும், ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) எனும் 300 பக்க நூலின் விலையை விமர்சித்தும், ‘நாலடியார், தமிழின் முக்கியமான கவி மற்றும் தத்துவ ஞானி என்று குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி அதில் ஊழல் நடந்திருப்பதை வெளிச்சமிட்டு காட்டினார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

இந்த செய்தி வெளியானதில் இருந்து, பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் MP சு. வெங்கடேசன் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளபக்கத்தில் இது குறித்து, தனது கண்டன குரல்களை பதிவு செய்துள்ளார். தனது பதிவில், " பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதில் நிகழ்ந்துள்ள ஊழலை எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்று வெளிக்கொண்டுவந்துள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள். கட்டிடத்தின் பெயரிலும், கட்டிட வடிவமைப்புக்கான ஒப்புதலின் பெயரிலும், அலமாரிகள் உள்ளிட்ட பொருட்களின் பெயரிலும் நடக்கும் ஊழலைப் போன்றதல்ல புத்தகத்தின் பெயரில் நடக்கும் ஊழல். அது நிலைத்திருந்து நிரந்தரமாக நஞ்சூட்டும் செயலுக்கு ஒப்பானது.

பெருமாள் முருகன் கண்டறிந்து வெளிக்கொண்டு வந்திருக்காவிட்டால், கீழடியின் வரலாறு எனும் நூல் நந்தி சிலை கண்டறியப்பட்ட செய்தியை சொல்லக் காத்துக் கொண்டே இருக்கும். அது வரலாற்றை சொல்வதல்ல, உண்மையான வரலாற்றைக் கொல்வது. பெரியார் அறிவுலகிற்குள் செல்லும் ஒரு வாசகனின் மனதிற்குள் இந்தச் செயல் எல்லா காலத்திலும் நடந்து கொண்டிருக்கும். அறிவுலகில் நிகழும் திருட்டும் ஊழலும் வெறும் பொருளாதார இழப்பை மட்டும் சார்ந்ததல்ல; மதிப்பிட முடியாத இழப்புகளைக் கொண்டது. இந்த ஊழல் குறித்து முறையான, பொறுப்புணர்வு மிக்க விசாரணை தேவை. போலியான புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்திலிருந்து உடனே அகற்றப்பட வேண்டும்!" என்று அதில் குறிப்பிட்டு பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.