தமிழ்நாடு

"தாய் நாட்டுக்காக உயிரிழந்த காவலர்கள்" - முதல்வர் விஜய்யின் வீர வணக்கம்.. மலர் வளையம் வைத்து மரியாதை!

அவர்களின் உயிர் தியாகத்தைப் போற்றும் வகையில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

Muthu Lakshmi

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் டிஜிபி அலுவலகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார். அதையடுத்து டிஜிபி அலுவலகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். 

1959-ல் லடாக்கில் தாய்நாட்டைக் காக்க உயிர்நீத்த ரிசர்வ் படை காவலர்களின் உயிர் தியாகத்தைப் போற்றும் வகையில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் இது குறித்து முதல்வர் விஜய் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 1959-ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் தாய்நாட்டைக் காப்பதற்காக வீரமரணமடைந்த 10 மத்திய ரிசர்வ் காவல் படைக் காவலர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தியாகத்தைப் போற்றும் காவலர் வீரவணக்க நாளில், நாட்டில் அமைதியையும், சட்டம்-ஒழுங்கையும் நிலைநாட்டும் உயரிய கடமையில் தங்களது இன்னுயிரைத் தியாகம் செய்த காவல் துறையினர் அனைவருக்கும் வீர வணக்கங்கள்! இயற்கைப் பேரிடர்கள், விபத்துகள், குற்றச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழல்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, துணிவுடனும், விழிப்புடனும் பணியாற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது. கடமையின் பாதையில் இன்னுயிர் நீத்து, அமரர்களான வீரத் தியாகிகளுக்குத் தலைவணங்கி அஞ்சலி செலுத்துவதோடு, காலநேரம் கருதாமல், அயராது உழைத்து, நாட்டின் அரணாகத் திகழும் காவல் துறையினரின் உன்னதப் பணிகளைப் போற்றிடுவோம்!

அதையடுத்து முதலமைச்சர் விஜய், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாகவே தீவிரமாக பெய்து வருகிறது. மழைநீர் அகற்றும் நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்கனவே அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். நேற்று முதல் மழைப்பொழிவு அதிகம் உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது, மழை நீர் அகற்றும் பணிகள், தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவது, மருந்துகளை கையிருப்பில் வைப்பது, நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் விரிவான ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்