சென்னையில் நடைபெற்ற 5-வது தேசிய வாழ்வுக்கான பேரணியில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பங்கேற்று பேரணியைத் தொடங்கி வைத்தது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கருக்கலைப்புக்கு எதிராகவும், பிறக்காத குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க வலியுறுத்தியும் நடைபெற்ற இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பேசிய சபாநாயகர் பிரபாகர், பிறக்காத குழந்தைகளுக்கும் கண்ணியமும் மதிப்பும் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஒரு குழந்தை உலகைக் காண்பதற்கு முன்பே அதன் உயிருக்கு மதிப்பு உண்டு என்பதை இந்தப் பேரணி நினைவூட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். குழந்தைப்பேறு மற்றும் குடும்பம் குறித்த மாறிவரும் அணுகுமுறைகள் குறித்தும் அவர் பேசினார். முந்தைய காலங்களில் அதிக குழந்தைகள் கொண்ட குடும்பங்கள் இருந்ததைச் சுட்டிக்காட்டிய அவர், பின்னர் “நாம் இருவர், நமக்கு இருவர்” என்ற நிலை மாறி, “நாம் இருவர், நமக்கு ஒருவர்” என்ற நிலைக்கும், அதன் பின்னர் குழந்தைப்பேற்றைத் தாமதப்படுத்தும் மனநிலைக்கும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சபாநாயகரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெண்களின் உடல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான முடிவுகளில் அவர்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும் என்றும், சட்டப்பூர்வமான கருக்கலைப்பு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் பெண்களின் இனப்பெருக்க சுயாட்சி மற்றும் பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமையை அங்கீகரித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சென்னையை சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் ஷாலின் மரியா லாரன்ஸ், சபாநாயகர் பேரணியில் பங்கேற்றதையும், அவர் தெரிவித்த கருத்துகளையும் விமர்சித்துள்ளார். மேலும், சபாநாயகரின் இந்த நிலைப்பாட்டுடன் முதலமைச்சர் விஜய் உடன்படுகிறாரா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவில் கருக்கலைப்பு உரிமைகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவை” என்று குறிப்பிட்ட ஷாலின் மரியா லாரன்ஸ், பெண்களின் உடல் சுயாட்சியை மறுக்கும் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் இந்த நிகழ்வில் பங்கேற்றது குறித்தும், முதலமைச்சர் அலுவலகம் இந்தக் கருத்தை ஏற்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் சபாநாயகரின் பங்கேற்பு மற்றும் கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜக தலைவர் வினோஜ் பி. செல்வம், இதேபோன்ற கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணி இந்து அமைப்பு ஒன்றால் நடத்தப்பட்டிருந்தால் அரசியல் கட்சிகளின் எதிர்வினை எப்படி இருந்திருக்கும் என கேள்வி எழுப்பினார். பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியும் சபாநாயகரின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். கருக்கலைப்பு தொடர்பான சட்ட உரிமைகள் நடைமுறையில் இருக்கும் நிலையில், சபாநாயகர் தெரிவித்த கருத்துகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவை என அவர் விமர்சித்தார்.
இதனிடையே, சபாநாயகரின் கருத்துகளுக்கும் தமிழக அரசின் சுகாதாரக் கொள்கைக்கும் இடையே வேறுபாடு இருப்பதை விளக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார். சபாநாயகர் எந்தச் சூழலில் அந்தக் கருத்துகளை தெரிவித்தார் என்பது தனக்குத் தெரியாது என்றும், அதை மக்கள் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
மேலும், இந்தியாவில் கருக்கலைப்பு மருத்துவக் கர்ப்பக்கலைப்பு (MTP) சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுவதாகவும், சட்ட விதிகளின்படி குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கருக்கலைப்பு அனுமதிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மருத்துவ ரீதியாக தேவையான பல்வேறு சூழ்நிலைகளில் கருக்கலைப்பு ஒரு மருத்துவத் தேவையாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், கருக்கலைப்பு எதிர்ப்பு பேரணியில் சபாநாயகர் பிரபாகரின் பங்கேற்பு, அவரது கருத்துகள், பெண்கள் உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்பு மற்றும் அமைச்சரின் விளக்கம் ஆகியவை தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்